வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (21/01/2017)

கடைசி தொடர்பு:09:42 (21/01/2017)

டொனால்டு ட்ரம்ப் உரை அமெரிக்கவாழ் இந்தியர்களை பாதிக்குமா..?

டொனால்டு டிரம்ப்
 

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூரில் சிறுபொறியாகத் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், சென்னை தொடங்கி இன்று மாநிலம் முழுவதும், 'தமிழன்டா' என்ற உணர்வுப்பூர்வமான அறவழிப்போராட்டமாக காட்டுத்தீயாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஏன் கோடிக்கணக்கான தமிழர்கள் என்று சொல்லலாம்...'ஜல்லிக்கட்டு' என்ற ஒற்றை வார்த்தையை தமிழகம் முழுவதும் எதிரொலித்தவண்ணம் உள்ளனர்.

இதுவரை எந்தவொரு அசம்பாவிதமோ, திருட்டு போன்ற சம்பவங்களோ இல்லாமல், 'அனைவருமே தலைவர்கள், இது நமது போராட்டம்' என்ற மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய அக்கறையுடன் சாரைசாரையாகக் குழுமி, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுஒருபுறமிருக்க, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். பதவியேற்ற உடன் அவர் ஆற்றிய முதல் உரையிலேயே அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்பதை நேரடியாகக் குறிப்பிடும் வகையில் உறுதிபடப் பேசியுள்ளார், டிரம்ப்-ன் பேச்சை உற்றுநோக்கும்போது, இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக, மத்திய அரசையோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள மாநில அரசையோ நம்பாமல், அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டில் இந்தியர்களின் உரிமைக்காக போராட வேண்டிய அடுத்த தருணம் உருவாகலாம் என்று எண்ணம் எழுகிறது.

45-வது அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்-ன் உரை விவரம்: 

"அமெரிக்க மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைப்பேன். அமெரிக்காவின் நலனே எனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். அமெரிக்கர்கள் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; நீங்கள் மீண்டும் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டீர்கள். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் நான் ஓய்வின்றி பணியாற்றுவேன். அமெரிக்காதான் எனது முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணம் உங்களுடையது. இது உங்களுக்கானது. இங்கு கூடியுள்ள அனைவருக்கும், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து அமெரிக்கர்களுக்குமானது இந்த தருணம்.

வாஷிங்டனில் மக்களுக்கான அதிகாரம் மீண்டும் வழங்கப்படும். அமெரிக்க மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது, அதனை மீட்டு செயல்படுத்துவேன்- இந்த நாளில் இருந்து நமது மண்ணில் புதிய பார்வையுடன் ஆட்சி நடைபெறும். வர்த்தகம், வரி விதிப்பு, குடியுரிமை, வெளிநாட்டு விவகாரம் போன்ற அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களின் நலன்களுக்கானதாகவே அமையும். உங்களுக்காக என் உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஒருபோதும் அமெரிக்க மக்களை கைவிட மாட்டேன்" என்று உணர்வுப்பூர்வமான உரையை நிகழ்த்தியுள்ளார். மக்களுக்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசியல்வாதிகளைப் பற்றி ஒருபோதும் நாம் பேசுவதில்லை என்றும், அதிபர் தேர்தலில் வெற்றுப் பேச்சு முடிவுக்கு வந்துள்ளது என்றும் டிரம்ப் பேசியுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதே, ஹெச்1- பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றும், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு அயல்பணி வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். தற்போது, அமெரிக்காவின் 45-வது அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அவரது பேச்சில், அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

டிரம்ப் பதவியேற்றதும் ஆற்றிய உரையை, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவில் இருந்து, அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வரும் இந்தியர்கள் கவனத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். தங்களின் எதிர்காலத்திற்கு ஏதாவது பங்கம் விளைவிக்கும் வகையில், டிரம்ப் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்துவிடுவாரோ என்ற அச்சம், அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் இப்போதே தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது.

எது எப்படியானாலும், ஜல்லிக்கட்டுக்காக வீதியில் இறங்கி இரவு பகலாக போராடும் தமிழக இளைஞர்கள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக குரல் கொடுக்க முன்வர மாட்டார்களா? ஒரு மாநிலப் பிரச்னைக்கே, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள், இந்தியா என்று வந்து விட்டால், தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, இந்தியர்களுக்காக, இந்தியர்கள் என்ற உணர்வுடன் போராடவும் தயங்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

- சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க