வெளியிடப்பட்ட நேரம்: 06:05 (01/02/2017)

கடைசி தொடர்பு:05:59 (01/02/2017)

பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த கூகுள் எர்த்!

2017-ம் ஆண்டு ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது கர்த் டேவிஸ் இயக்கத்தில் செப்.10, 2016 அன்று வெளிவந்த ஆஸ்திரேலியப் படமான 'லயன்'. இது சரூ என்பவர் எழுதிய 'எ லாங் வே ஹோம்' என்னும் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சரூ, மத்திய பிரதேசத்தின் கண்ட்வா என்னும் சிறுகிராமத்தில் பிறந்தவர். தனது ஐந்தாவது வயதில் அவரது சகோதரர் குட்டுவுடன் ரயிலில் பயணிக்கும் போது, தொலைந்து கல்கத்தாவுக்குச் சென்று விட, அங்கு வீதியில் ஆதரவற்ற குழந்தையாகத் திரிந்தார். பின்னர் கல்கத்தாவில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட சரூவை, ஒரு ஆஸ்திரேலியத் தம்பதி தத்தெடுத்து ஆஸ்திரேலியாவில் வளர்த்து வந்தனர்.

தாயாருடன் சரூ
 

சரூ படித்து வளர்ந்து வாலிபனாக, தன்னைப் பெற்றெடுத்த தாயாரை இந்தியாவில் தேட, கூகுள் எர்த் சேவையைப் பயன்படுத்திக் கொண்டார். ஐந்து வயதில் தான் பிறந்த கிராமம், மாநிலம், தான் பயணித்த ரயில் பற்றிய விவரங்கள் எதுவுமே சரூவுக்கு நினைவில்லை. கல்கத்தா ரயில் நிலையத்தில் தான் வந்து இறங்கியது மட்டுமே நினைவுள்ளது. ரயிலின் வேகத்தை மட்டுமே வைத்து, அது கல்கத்தா வந்த திசையைத் தேடி, பலரிடம் விவரங்களை விசாரித்து கண்டறிந்தார். பின்னர் அந்த திசையில் உள்ள சிறு கிராமங்களை கூகுள் எர்த் சேவை மூலமாகத் சூம் செய்து தேடத் தொடங்கி, இறுதியாக தனது கிராமத்தையும், தனது வீட்டின் மேற்புறத் தோற்றத்தை வைத்து முகவரியையும் கண்டறிந்தார். பல வருடங்கள் கழித்து தாயாரைப் பார்த்த சந்தோஷத்தில் திளைத்தார் சரூ. தனது வாழ்க்கை அனுபவத்தை சரூ புத்தகமாக வெளியிட்டார். இதனை ஆஸ்திரேலிய இயக்குனர் கர்த் டேவிஸ் படமாக எடுத்து, வெளியிட, படம் மிகுந்த வரவேற்பு பெற்றது.  ''தொழில்நுட்பத்தை  பலர் தவறாகப் பயன்படுத்துகிறனர். ஆனால் நான் சரியான முறையில் பயன்படுத்தியதால், அது என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளது'' எனக் கூறும் சரூ, தன் தாயாரைக் கண்டுபிடிக்க உதவிய கூகுள் நிறுவனத்துக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாக்களில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக நாம் நம்பினோம். ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க