வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (02/02/2017)

கடைசி தொடர்பு:21:01 (02/02/2017)

சீனா மீது போர் தொடுக்கப் போகிறதா அமெரிக்கா? ட்ரம்ப்பின் அதிரடி வியூகம்

2014-ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை கணக்கீட்டின்படி, உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது இடம் சீனாவுக்கு. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டின்படி அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்து விட்டது சீனா. மேலும் இருதரப்புக் கொள்கைகள் தொடங்கி, எல்லைப்பரப்பு நிர்ணயம் வரை ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக தனது மறைமுக எதிரியாகக் கருதுவது சீனாவைத்தான். இந்தியாவுடன் அருணாச்சலப் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பது தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபட்ட நிலையில் இருந்து வரும் சீனா, பசிபிக் பெருங்கடல் பகுதியில் தனது எல்லையை நிர்ணயிப்பதிலும் அமெரிக்காவுடன் அதேபோக்கை காலம் கடந்தும் கையாண்டு வருகிறது.

அமெரிக்க மற்றும் சீனக் கொடி

அமெரிக்க அதிபராக தற்போது டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை அடுத்து, அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களுக்கான இருப்பு அனுமதி தொடர்பான கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை அவரது அரசு எடுத்துள்ளது. இதன்காரணமாக, அமெரிக்க டாலர் மதிப்பும் கணிசமாக 
குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பல காரணங்களுக்காக, மிக விரைவிலேயே சீனாவுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரம்ப்-ன் முதன்மை ஆலோசகரான ஸ்டீவ் பேனனும் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சீனா மீது அமெரிக்கா விரைவில் போர் தொடுக்கும்" என்று கூறியுள்ளார். 

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்

அந்நிய நாடுகள் மீது போர் தொடுப்பது அமெரிக்காவுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும், அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பின் அவரது அதிரடித் திட்டங்களில் ஒன்றாக இது இருக்குமோ என்கிற பதற்றத்தில் மக்கள் இருக்கிறார்கள். சீனா மீதான போரை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய பெனான், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் தேசிய பாதுகாப்பு மற்றும் திட்டக்குழுவில் முதன்மை  ஆலோசகராக இருப்பவர். மேலும் அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தலைமைக் கமாண்டோ பொறுப்பில் இருந்தவரும்கூட. பசிபிக் கடல் எல்லை பங்கீடு தொடர்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. போதாக்குறைக்கு சீனாவும், பசிபிக் பெருங்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி தனது ராணுவத் தளவாடங்களை அங்கே நிறுத்தியுள்ளது. கடந்த வாரம் சீன இராணுவ உயர் அதிகாரி ஒருவரும், “அமெரிக்கா உடனான போர் என்பது வெறும் கனவுப் பேச்சு இல்லை. அதற்கான திட்டங்கள் நிறைவேறிக் கொண்டே இருக்கின்றது” என்று கூறியுள்ளார். அமெரிக்காவும் தனது திட்டங்களை ரகசியமாக வகுத்துக்கொண்டே இருக்கிறது. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த முக்கிய இராணுவ உயர் அதிகாரிகள் சந்திப்பில், ஸ்டீவ் பேனனும் இருந்தார் என்பதே அதற்கான அத்தாட்சி.

ஸ்டீவ் பெனான்

ஆனால், சீனாவுடன் போர் என்றால் அது சீனா மீது மட்டுமாக இருக்காது. சீனாவின் நேச நாடான ரஷ்யாவும், பாகிஸ்தானும் அவர்களுடன் இணையும் வாய்ப்புகள் அதிகம். அப்படியிருக்க, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை உரிமைப் பிரச்னையாக மட்டும் இது இருக்காது. சர்வதேச அரசியலில் மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியம் உண்டெனில், இன்னும் ஐந்து வருடங்களில் எதிர்பார்க்கப்படும் இந்த சீன - அமெரிக்கப் போர் அதற்கான கருவாக இருக்கலாம்.

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்