அகதிகளுக்கு தடைவிதித்த வழக்கில் டிரம்ப்க்கு மீண்டும் பின்னடைவு! #TravelBan

டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் இறுதியில் ஈராக், சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள்  அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தடை விதித்திருந்தார்.  ஆனால் தடைக்கு எதிராக டிரம்ப் சார்பில் சான்பிரான்சிஸ்கோ மேல்முறையீடு சர்க்கியூட் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கு, 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் டிரம்ப் உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு விதித்த தடையை நீக்க முடியாது என மூன்று நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பின் காரணமாக, ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு வரலாம், இதுபோன்று அகதிகளும் அமெரிக்காவில் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்புக்கு எதிராக டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தீர்ப்பு தொடர்பாக அவர் டுவிட்டரில், “உங்களை கோர்ட்டில் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார். எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் தரப்பில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளார்.
தீர்ப்பில் நீதிபதிகள், “7 நாடுகள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு காரணம், பயங்கரவாத அச்சுறுத்தல்கள்தான் என்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது" என்று கூறி உள்ளனர்.

தடை விதிக்கப்பட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த எந்தவொரு நபரும் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தியதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!