வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (21/02/2017)

கடைசி தொடர்பு:08:39 (21/02/2017)

‘உனக்கான சுதந்திரத்தை நீயே எடுத்துக்கொள்..!’ மால்கம் X - நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

மால்கம் எக்ஸ்

ங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஏதேனும் கற்றுக்கொடுக்க விரும்பினால் போராடும் குணத்தைக் கற்றுக்கொடுங்கள். புதிதாக எதையாவது சொல்லித் தர வேண்டுமானால் உலக போராளிகளைப் பற்றியும், மக்களுக்காக அவர்கள் வாழ்ந்ததைப் பற்றியும் சொல்லிக் கொடுங்கள். ஏதேனும் புரியவைக்க விரும்பினால் மக்களுக்கான சமத்துவம் என்றால் என்ன என்பதைப் புரிய வையுங்கள். உலகம் இந்த அளவுக்கு நாகரிக வளர்ச்சியையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடைந்திருக்கிறது என்றால், அதற்கான விலை எண்ணற்ற பல போராளிகளின் உயிர் எனலாம். 

ஆம்! முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக, அதிகாரவர்க்கத்தினரின் திமிருக்கு எதிராக, பலம் கொண்டவனின் பாசிசத்துக்கு எதிராக, அடிமை மக்களின் விடுதலைக்காக, சுதந்திர வேட்கைக்காக, எத்தனை எத்தனயோ போராளிகள் தங்களின் உயிரை இந்தப் பூமியில் விதையாக்கிக் கொண்டு  விழுந்ததன் விளைவே, இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரமான நவநாகரிக உலகமாகும். அதுபோன்று, மக்களின் விடுதலைக்காக கடைசி மூச்சு உள்ளவரை போராடிய மால்கம் எக்ஸ்-ன் நினைவு நாள் இன்று.

அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடிய காலம் அது. நிறவெறித் தாக்குதல் என்பது வெறும் அடி, உதை மட்டுமல்ல; நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடிய செயல்கள் நிறைந்தவை அவை. அக்காலத்தில் அங்கு, இரண்டு வாஷ்பேசின்கள் இருக்கும். வெள்ளை இனத்தவருக்கு தனியாகவும், கறுப்பினத்தவருக்கு தனியாகவும் இருக்கும். இதில் கொடுமை என்னவென்றால், வெள்ளையர்கள் பயன்படுத்திய கழிவு நீரையே கறுப்பினத்தவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இது வெறும் சாம்பிள்தான். இதைவிட பல கொடூரங்களை கறுப்பர்கள் அனுபவித்தனர். இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடிய இரண்டு மாபெரும் போராளிகளை அமெரிக்காவால் எந்தக் காலத்திலும் மறக்கவே முடியாது. ஒருவர் அமைதியை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு போராடிய மார்ட்டின் லூதர் கிங். மற்றொருவர் 'வன்முறைக்கு திருப்பியடித்தலே சரியான தீர்வாகும்' என்று ஆயுதம் ஏந்திப் போராடிய மால்கம் எக்ஸ். 

இளைமைப் பருவம்!

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தின் ஒமாஹா நகரில் 1925-ம் ஆண்டு மே 19-ம் நாள், கறுப்பினக் குடும்பத்தில் பிறந்தவர் மால்கம் லிட்டில். இவரது தந்தை ஏர் லிட்டிலும் கறுப்பின மக்களுக்காகப் போராடிய உயிர்நீத்தவர். 'பிளாக் லீஜியன்' என்ற வெள்ளை நிற வெறியர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியதன் காரணமாக, அவர் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் மால்கத்தின் அம்மாவுக்கும் பைத்தியக்கார பட்டம் சூட்டி, மனநல மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். மால்கம் ஒருமுறை  பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், 'நீங்கள் என்ன உத்தியோகத்தில் சேர விரும்புகிறீர்கள்' என கேட்டபோது, லிட்டிலோ 'நான் வழக்கறிஞராகி சேவை புரிவேன்' என்றான். அதற்கு அந்த நிறவெறி பிடித்த ஆசிரியர் 'நீ கேவலமான கருப்பினத்தைச் சேர்ந்தவன், உன்னால் வழக்கறிஞர் வேலைக்குச் சேர முடியாது' என்றார். இது மால்கமின் மனதில் அழியாத வடுவாக மாறிப்போனது. தந்தையும் கொல்லப்பட்டு, தாயும் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததால் ஆதரவற்றவனானான் மால்கம். ஒருமுறை பசியில் வாடிய மால்கம், சூதாட்ட கும்பலால் ஏமாற்றப்பட்டார். வறுமை, பசி, அடிமை முறை, ஆதரவற்ற நிலை என பல கொடுமைகளை அனுபவித்த மால்கமின் வாழ்க்கை திசைமாறியது.

திசை மாறிய பயணம்!

'நாம் நன்றாக இருக்க வேண்டுமெனில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' எனும் முடிவுக்கு வந்த மால்கம், திருட்டு மற்றும் அனைத்து விதமான சட்ட விரோதச் செயல்களையும் செய்யத் தொடங்குகிறார். சில நேரம் ஷூ பாலிஷ் போடுதல், பலநேரங்களில் திருட்டு, கஞ்சா, அபின் கடத்துதல், இரவு கிளப் நடத்துதல் போன்ற அனைத்து சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கினார். தனக்கென ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டு, வழிப்பறிக் கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தார். ஒருகட்டத்தில் காவல்துறையிடம் பிடிபட்டு கடுங்காவல் தண்டனையும் பெற நேர்ந்தது. கைது செய்யப்பட்ட பின் மால்கம் சொன்ன வார்த்தை இப்போதும் பிரசித்தி பெற்றது. "ஒரு மனிதனின் நடத்தையைத் தீர்மானிப்பது, அவனைச் சுற்றி இருக்கும் சூழல்தான். அசிங்கமான சூழலில் அவன் அசிங்கமாகத்தான் நடந்து கொள்ள முடியும்" என்றார். 

மால்கம் எக்ஸ்

சிறைச்சாலை சென்ற மால்கம்-க்கு, ஜான் பெம்ப்ரி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர்தான் மால்கமுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். அதன் பின்னர்தான், மால்கமின் வாழ்வே புத்தகம் ஆவதற்கு வித்திட்டது. சிறையில் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தார். புதிய கருத்துகளையும், புதிய வார்த்தைகளையும் கற்றுக்கொண்டார். லிட்டில் என்பது 'அடிமை மரபை குறிக்கும் சொல்' என உணர்கிறான். அதன்பின் மால்கம் லிட்டில் என்ற தனது பெயரை மால்கம் எக்ஸ் என மாற்றினார். இப்படித்தான் மக்களுக்கான போராளியாக மால்கம் எக்ஸ் உருவானார். "சிந்திப்பதற்கு சிறந்த இடம் எதுவென்றால், அது கல்லூரிக்கு அடுத்து சிறைச்சாலைதான்" என்று மால்கம் கூறினார். பத்து ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார் மால்கம் எக்ஸ். இந்த நேரத்தில்தான் கருப்பின மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடத்தி, அந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற இயக்கம். தன்னை அந்த இயக்கத்துடன் இணைத்துக் கொண்டார். எங்கெல்லாம் கறுப்பின மக்களுக்கு எதிராக அநியாயம் நடந்ததோ, எங்கெல்லாம் வன்முறை தலைவிரித்தாடியதோ அங்கெல்லாம் மால்கம் எக்ஸின் ஆயுதங்கள் தீர்வைத் தேடித் தந்தன.

‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ இயக்கத்தின் தலைவரான எலிஜா முகமது மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு, ஆயுதம் ஏந்திப் போராடியதால் மக்களின் மனதில் மால்கம் எக்ஸ் பெயர் மிகவும் ஆழமாகப் பதிந்தது. கறுப்பின மக்களின் விடுதலைக்காக, இவர் நிகழ்த்திய உரைகளெல்லாம் வரலாற்றோடு என்றும் கலந்தே இருக்கும். “நீ விரும்பியதை, விமர்சனம் இல்லாமல் உன்னால் அடையவே முடியாது”, “எதிர்காலத்துக்காக இன்றே நீ தயாராகி விடு”, “ஒரு விஷயத்தில் நீ உறுதியாக இல்லையென்றால், எல்லா விஷயத்திலும் சறுக்கி விடுவாய்”. இதுபோன்ற அனல் பறக்கும் வார்த்தைகளால் மக்களைத் தட்டி எழுப்பினார். அந்த உரைகளைக் கேட்கும் மக்கள், 'உங்களுடன் போராடவும், ஆயுதம் தூக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று உறுதி அளித்தனர். அந்த அளவுக்கு அவரது உரையில் உரிமைக்கான எழுச்சி இருக்கும். இவர் எந்த அளவுக்கு போராளி என்றால்... "ஒரு கலவரத்தை இவரால் ஒற்றைச் சொல்லில் தடுக்கவும் முடியும், நடத்தவும் முடியும்" என்று பத்திரிகைகள், இவரைப் பற்றி தலையங்கம் எழுதும் அளவுக்கு மிகச் சிறந்த ஆயுதம் ஏந்திய போராளி.

மால்கம் எக்ஸ்

ஃபிடல் காஸ்ட்ரோவும், மால்கம் எக்ஸூம் சந்தித்துக் கொண்டபோது, 'அமெரிக்காவுக்கு உள்ளும் ஒரு கலகக்காரன் இருக்கிறான். எனது ஆதரவு உனக்கு எப்போதும் உண்டு' என ஃபிடல் தெரிவித்தார். இதற்கிடையில் ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ இயக்கத்தின் தலைவரான எலிஜா முஹமதுவின் சில நடவடிக்கைகளை மால்கம் எக்ஸ் கண்டித்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் இறப்பு தொடரபாக எலிஜா தெரிவித்த கருத்து,  மால்கம் எக்ஸ்-க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் இருவருக்குமான உறவு முறிந்தது. அதன் பின் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, ‘தி முஸ்லிம் மாஸ்க்' எனும் புதிய இயக்கத்தைத் தோற்றுவித்து மக்களுக்காக போராடி வந்தார். பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணங்கள்தான் அனைத்து மக்களின் விடுதலை குறித்த எண்ணத்தை இவருக்குள் விதைத்தது. கடைசியாக 1965-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் நாள் பால்ரூம் அரங்கில், உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் இவரை சுட்டுக் கொன்றனர். 

எங்கெல்லாம் உன் உரிமை மறுக்கப்படுகிறதோ? எப்படியெல்லாம் அதிகார வர்க்கம் உன்னை அடிமைப்படுத்த எண்ணுகிறதோ? எப்போதெல்லாம் உனக்கான சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ? அப்போதெல்லாம் மால்கம் எக்ஸ் சொல்வது இதுதான். "உனக்கான சுதந்திரத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள்". 

- ஜெ.அன்பரசன்


டிரெண்டிங் @ விகடன்