வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (22/02/2017)

கடைசி தொடர்பு:13:40 (22/02/2017)

ஜெட் ஏர்வேஸை ஜெர்மன் போர் விமானங்கள் மடக்கியதன் அதிர்ச்சிப் பின்னணி! #9w118 #jetairways

மும்பையில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற  ஜெட் ஏர்வேஸ் விமானம் காணாமல்போனதற்கான காரணங்கள், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. 

ஜெட் ஏர்வேசுக்கு வழிகாட்டும் ஜெர்மன் போர் விமானம்

கடந்த 16-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பையில் இருந்து லண்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஜெர்மனியின் கோலென் நகரின் மீது பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான  விமானத்தின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் கடத்தப்பட்டதாகக் கருதிய ஜெர்மன் அரசு, உடனடியாக இரு போர் விமானங்களைக்கொண்டு காணாமல் போன விமானத்தைத் தேடியது. வானில் பறந்துகொண்டிருந்த இந்திய விமானத்தைக் கண்டுபிடித்துப் போர் விமானங்கள் மடக்கின. இந்த போயிங் 777 ரக விமானத்தில் (எண் 9W 118) 330 பயணிகளுடன் 15 விமான ஊழியர்களும் இருந்தனர். 

ஜெர்மன் போர் விமானங்கள் வழிகாட்ட, இந்திய விமானம் பறந்துசென்ற வீடியோக்கள், இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த நேரத்தில், விமானம் லண்டனைச் சென்றடைந்ததாகச் சொல்லப்பட்டது. விமானம் காணாமல் போனது குறித்து  ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  விசாரணையில்... தலைமை பைலட் உறங்க, துணை விமானி விமானத்தை இயக்கியது தெரியவந்துள்ளது. அவரும் அரைகுறை கிறக்கத்தில் இருந்துள்ளார். செக் குடியரசுக்கு மேல் பறக்கும்போது, பரேக் நகரத் தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்குத் தொடர்பு இருந்துள்ளது. ஆனால், ஜெர்மனி வான்வெளிக்குள் நுழைந்ததும்  தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்துள்ளது.  

தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழக்க, தவறான அலைவரிசையை செட் செய்துள்ளதும் ஒரு காரணம் எனத் தெரியவந்துள்ளது. துணை விமானி, தனது ஹெட் செட்டில் ஒலி அளவையும் குறைவாக வைத்திருக்கிறார். தவறான சமிக்ஞைகளைக் கையாண்டிருக்கிறார். இப்படி, சுமார் 33 நிமிடங்கள் 500 கி.மீட்டர் தொலைவுக்கு ஜெர்மனி வான்வெளியில் விமானம் பறந்துசென்றுள்ளது. அந்தச் சமயத்தில் டெல்லியில் இருந்து லண்டனை நோக்கிச் சென்ற (எண் 9W 122) என்ற மற்றொரு ஜெட் ஏர்வேஸ் விமானம் செக் குடியரசின் வான் வெளிக்குள் நுழைந்துள்ளது. மற்றொரு இந்திய விமானத்தைக் கண்ட செக் குடியரசின் பரேக் நகரத் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், அந்த விமானத்தைத் தொடர்பு கொண்டு, மும்பை - லண்டன் விமானம் காணாமல்போனது குறித்து  தகவல் தெரிவித்திருக்கின்றனர். டெல்லி - லண்டன் விமானத்தின் விமானி, இந்திய தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். 

தரைக்கட்டுப்பாட்டுடன் சுமார் அரைமணி நேரமாக தொடர்பு இல்லாமல், மும்பை - லண்டன் விமானம் பறந்துள்ளது. பின்னர்தான் ஜெர்மனி போர் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை  வானில் வழிமறித்துள்ளன. இது தொடர்பாக, விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''தற்போதைய நிலையில் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. காக்பிட்டில் நடந்த வாதங்கள் குறித்து அறிவதற்காக, விமானி அறையில் இருந்து 'வாய்ஸ் ரொக்கார்ட் ' பதிவுகள்  எடுக்கப்பட்டுள்ளன''  எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன், கடந்த 2014-ம் ஆண்டும் இதேபோன்று ஜெர்மன் வான்வெளியில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று அரை மணி நேரம் தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு இல்லாமல் பறந்திருக்கிறது. பொறுப்பற்ற விமானிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலரிடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

- எம்.குமரேசன் 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்