ஆஸ்கர் பட்ஜெட்டும், அமெரிக்க இயற்கை எரிவாயுத் திட்டமும்...! #3MinsRead

டக்கோட்டா இயற்கை எரிவாயு திட்ட எதிர்ப்பாளர்

நெடுவாசல் போலவே பாறைகளின் அடியிலிருந்து இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதியில் நடந்துவரும் போராட்டம் குறித்தும் நீங்கள் அறிந்திருக்கலாம். சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக செவ்விந்தியர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அங்கே, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலாவது இதற்குத் தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், புதிதாகப் பதவியேற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு, 3.78 பில்லியன் டாலர் அளவிலான இந்தத் திட்டம் சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்று அறிவித்தார். அது என்ன சட்டதிட்டம் என்று இன்றுவரை அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அரசுடன் ஒப்பந்தம்செய்திருக்கும் நிறுவனத்துக்கு 55 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் இதில் லாபம் கிடைக்கும். ஏற்கெனவே, அமெரிக்க பொருளாதாரநிலையை கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில், சற்றே சரிந்திருக்கிறது. அதனை எப்படியாவது உயர்த்திவிட இந்தத் திட்டத்தை நிறைவேற்றிவிடவே அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.

89வது ஆஸ்கர் விருது நிகழ்வு

இது ஒருபக்கம் இருக்க, 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சென்ற மாத இறுதியில் அமெரிக்காவின் பகட்டும் படாடோபமுமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்தது. விழா முடிந்த நிலையில் 1500 வரை வருகை தந்திருந்த அந்த விழாவுக்கான பட்ஜெட் செலவை சில அமெரிக்க செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. இந்த வருடம் மட்டும் 42.8 மில்லியன் அமெரிக்க டாலர் இதற்காகச் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 285 கோடி ரூபாய். விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு தரப்பட்ட ஆஸ்கர் பொம்மை வடிவிலான சாக்லேட்டுகளுக்கு மட்டும் 20,000 அமெரிக்க டாலர்வரை செலவிடப்பட்டுள்ளது. தவிர நம்மூர் பேக்கரிகளில் கிடைக்கும் ட்ரஃபில் வகை கேக்குகள் போன்றவைக்கு 34,800 அமெரிக்க டாலர் செலவாகியுள்ளது. இதுதவிர விழா அரங்கில் விரிக்கப்படும் சிகப்புக் கம்பளம், ஆஸ்கர் விருது உள்ளிட்டவற்றிற்கு தனித்தனி பட்ஜெட். விழாவின் இடையே ஒளிபரப்பட்ட விளம்பரத்துக்கு மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

20,000 அமெரிக்க டாலர் வரை செலவிடப்பட்ட விருது வடிவிலான சாக்லேட்

”அடியாத்தீ..!” என்று வாய் பொத்தி ஆச்சரியமாகப் பார்க்கும் முன்பு மற்றுமொரு துணுக்கு. இது போன வருட, பட்ஜெட்டை விடக் குறைவாம். சென்ற வருடம் விளம்பரத்துக்கு மட்டும் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. விழாவுக்கான பெருவாரியான செலவுகளை வால்ட் டிஸ்னி நிறுவனம்தான் ஏற்றுக் கொள்கிறது. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வருவாய்த்துறைக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் என்றாலும், இவ்வளவு பணவிரயம் ஒரு விழாவுக்குத் தேவையா? என்பதுதான் கேள்வி. டகோட்டா இயற்கை எரிவாயு திட்டத்தில் அமெரிக்க அரசும் குறிப்பிட்ட கம்பெனியும் தேடும் லாபத்தை இந்த விரயத்தை சரிகட்டுவதன் வழியாக ஓரளவு சமன் செய்திருக்கலாமே!. இன்றளவும் அங்கே தொடர்ந்துகொண்டிருக்கும் போராட்டத்தில் நடந்த தாக்குதல்களில் காயமடைந்த இரண்டு மூன்று பேருக்கு கைகள் அகற்றவேண்டிய நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

நினைத்துப் பாருங்கள், வெறுமனே ஏதோ ஒரு இடத்தில் வைக்கப்போகும் பொம்மை ஆஸ்கார் விருது ஒவ்வொன்றும் 900 அமெரிக்க டாலர் என்றால் அரைவயிறுக்கே அல்லல்படும் ஒருவனின் வயிறு கொஞ்சம் நஞ்சமா எரியும்?. மக்களின் பணம் மீதான அக்கறை என்பதில் மட்டும் பாரபட்சமில்லாமல் வல்லரசு முதல் உள்ளூர் அரசு வரை ஒரே மாதிரியாகதான் சிந்திப்பது என்பது ஜனநாயகத்தின் எந்த டிசைனில் வருகிறதோ தெரியவில்லை.

- ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!