எரிந்த சாம்சங் தயாரிப்புகள்... எண்ணெய் ஊற்றிய ஜான் ஆலிவர்! | John Oliver takes on Samsung in his show

வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (15/03/2017)

கடைசி தொடர்பு:16:22 (15/03/2017)

எரிந்த சாம்சங் தயாரிப்புகள்... எண்ணெய் ஊற்றிய ஜான் ஆலிவர்!

ஜான் ஆலிவர் சாம்சங்

உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜான் ஆலிவர். பிரபலங்கள் துவங்கி நிறுவனங்கள், சமூக பிரச்னைகள் என அனைத்தையுமே நகைச்சுவையாக கலாய்த்து அதன் வீரியத்தை அதிகரிக்கும் தொகுப்பாளர். அவரது நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ட்ரம்ப் கலாய்க்கப்பட்ட அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் இணையத்தையே புரட்டி போட்டது. கிட்டத்தட்ட 2 கோடி பேரால் பார்க்கப்பட்ட அந்த வீடியோ ட்ரம்பை நிலைகுலைய வைத்தது. அதேபோல்தான் தற்போது சாம்சங் நிறுவனத்தை கலாய்த்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சாம்சங் தயாரிப்பான நோட் 7 வெடித்துச் சிதறியது உலகறிந்த உண்மை. தொழில்நுட்பக் கோளாறுகள், பேட்டரி தயாரிப்பில் ஏற்பட்ட குளறுபடி என சமாளித்தாலும் தயாரிப்புகளைத் திரும்பப் பெற்றது சாம்சங் பெயரைக் கெடுத்தது. இந்த நிகழ்ச்சி சாம்சங் பற்றி தான் என முதல் பந்திலேயே சிக்ஸரோடு துவங்கும் ஆலிவர், ”இந்த நிறுவன தயாரிப்புகளின் பாதிப்புகளைப் பற்றிதான் பேசப் போகிறோம். இந்நிறுவனம் வெளியிட்டுள்ள நோட் 7 போன் எப்படி வெடித்துச் சிதறியது என கஸ்டமர் ரிவியூவை தொடர்ந்து நோட் 7 மட்டுமல்ல சாம்சங்கின் மற்ற தயாரிப்புகளும் பாதிப்புக்குள்ளாகித்தானுள்ளன. அடுத்ததாக கடந்த நவம்பர் 2016ம் ஆண்டு சாம்சங் 2.8 மில்லியன் வாஷிங் மிஷின்களை திரும்பப்பெற்றது.இந்த வாஷிங் மிஷின்களைப் பயன்படுத்த எனக்கு பயமாக உள்ளது. இவை குழந்தைகளை பாதிக்குமோ என்ற பயம் உள்ளது எனக்கூறும் கஸ்டமர் ரிவியூவை இது தான் ஒரு தயாரிப்புக்கு வரும் மோசமான ரிவியூ” என்று தொடர்கிறார்

தனது ஸ்டைலில் ஒரு விளம்பரத்தை பிரத்யேகமாக சாம்சங் தயாரிப்புகளுக்குத் தயாரித்துள்ளார் ஜான் ஆலிவர். சாம்சங் போன், டிவி, வாஷிங் மிஷின், வாக்வம் க்ளீனர் என அனைத்து தயாரிப்புகளையும் அதன் சிறப்பம்சங்களை கலாய்க்கும் அந்த வீடியோவின் இறுதியில் அனைத்து தயாரிப்புகளும் பற்றி எரியுமாறு முடிகிறது. கடைசியாக இந்தத் தயாரிப்புகள் மட்டுமல்ல சாம்சங்கின் பெயரும் பற்றி எரிகிறது எனக் கலாய்த்து முடித்துள்ளார் ஜான் ஆலிவர்.

இந்த நிகழ்ச்சி குறித்து சாம்சங் எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் இன்னமும் அந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை சரியான முறையில் மேம்படுத்த முயன்று வருகிறது என்பது தெரிகிறது. சாம்சங்கின் எஸ் 8 போன் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் நோட் 7-ல் உள்ள குறைகள் கலையப்பட்டிருக்கும் என்று சாம்சங் கூறியிருந்தாலும் இணையத்தில் இந்த போனும் வெடிக்கும் என்ற விஷயங்கள் அதிகமாகி வருகின்றன. சாம்சங் தயாரிப்புகளில் உள்ள குறைகளை நகைச்சுவையாக சுட்டிக்காட்டும் இந்த வீடியோ நான்கு லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி ஹிட் அடித்துள்ளது. ஜான் ஆலிவர் சிஐஏ சொதப்பல்கள் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆதரங்களைப் பற்றிய நிகழ்ச்சியிலும் சாம்சங் டிவிக்களில் வீப்பிங் ஏஞ்சல் ப்ரோக்ராம் மூலம் ஸ்பையாக சாம்சங் டிவியைப் பயன்படுத்த முடியும் என்ற சிஐஏவின் பதிலையும் விளாசியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் ஏற்கெனவே பற்றி எரியும் சாம்சங் தயாரிப்புகள் ஜான் ஆலிவர் நிகழ்ச்சியில் மேலும் பற்றிக்கொண்டது சாம்சங்கைப் பெருமளவில் பாதித்துள்ளது.

ஜான் ஆலிவர் ஷோவின் வீடியோ!

ச.ஶ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்