3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை! எகிப்தை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்

எகிப்து என்றாலே பல ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்து இருக்கும், தற்போது மூன்றாயிரம் ஆண்டுப் பழமையான சிலை ஒன்றினை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

 எகிப்து சிலை

எகிப்து நாட்டில், நைல் நதியின் கரையில் மாபெரும் தலைநகரம் கெய்ரோ. ஒட்டுமொத்த அரபு ராஜ்ஜியத்திலும், ஆப்பிரிக்காவிலும் கெய்ரோ தான் பெரிய நகரம். இவ்விடத்தின்  எல்-மெத்தரியா பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று ஆய்வினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது, 30அடி உயரச் சிலை ஒன்றை, உடைந்த நிலையில்  பூமிக்கு அடியில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். இந்தச் சிலையானது சுமார் 3000 வருடப் பழமையான சிலை எனவும், எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களின் வம்சத்தில், 19வது வம்சத்தின் முன்றாவது மன்னரான, இரண்டாம் ராமேசஸின் உருவச்சிலையாக இருக்கலாம் என எகிப்திய நாட்டின்  மாநில தொல்பொருள் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வு என்பது, சமீபத்தில் எகிப்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் மிக முக்கிய தொல்லியல் ஆய்வாகப் பார்க்கப்படுகிறது. 

எகிப்து

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்தச் சிலையில் இருக்கும் உருவம் இரண்டாம் ராமேசஸிஸ் தான் என்பதற்கு தகுந்த ஆதாரம் இதில் குறிப்பிடப்படவில்லை, சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் பண்டைய எகிப்து நகரமாக விளங்கிய ஹெலியோபொலிஸ் பகுதி என்பதால் தொடர்ந்து ஆய்வு செய்வதன் மூலமே உறுதிப்படுத்த முடியும் என்றனர். ஆனால் ஜெர்மனியின் லைப்சிக் பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவர் டீட்ரிச் ரா, இந்தச் சிலை நிச்சயம் ராமேசஸிஸ் உடையதுதான். அவர் காலத்திலே இச்சிலை நிறுவப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

 Egypt Statue

ராமேசஸிஸ், கி.மு 1213 முதல் 1279 வரையில் கெய்ரோ நகரை 66 ஆண்டுக்காலம் ஆட்சி செய்தார். நுபியா மீது போர்தொடுத்து மிகப்பெரிய வெற்றி கண்டார் ராமேசஸிஸ். இன்று நவீன சூடான் மற்றும் சிரியா பகுதிகள் அன்று நுபியா என்றழைக்கப்பட்டது.தற்போது சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதி, கிரேக்க-ரோமானியர்களின் காலத்தில் மிகப்பெரிய அழிவை சந்தித்தது, பழமை வாய்ந்த அறிய பொருள்கள் பல சூறையாடப்பட்டு, அலெக்சாண்டிரியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் கொண்டு செல்லப்பட்டன. உயரமான கோபுரங்கள் கொண்ட எகிப்தில் பல உயரமான சிலைகளும் உள்ளன, ராமேசஸிஸ் சிலையின் தாக்கத்தால் 1818ல் பெர்சி பைஷ் ஷெல்லி எழுதிய கவிதை மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது. அந்தக் கவிதையின் சாரமானது,  எவ்வளவு பெரிய பேரரசாக இருந்தாலும் அது ஒரு நாள் அழிந்து போகும்; பலம் வாய்ந்த சர்வாதிகாரிகள் ஒரு நாள் உலக நினைவிலிருந்து மறைந்து போவார்கள் என்பதே. 

Egypt

தற்போது பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள 30 அடி உயரச் சிலையின் பாகங்களை மீண்டும் அதேபோல பொருத்த முடியுமா,  உருவம் கொடுத்து புதுப்பிக்க முடியுமா என்று முயற்சி செய்து வருகிறார்கள் ஆய்வாளர்கள், தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வுகளும் நடந்து வருகின்றன. 2018-ஆம் ஆண்டில் இச்சிலை, தி கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இருக்கும் இடமான கிசாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு திறக்கப்பட உள்ளது.

-ஜோ.கார்த்திக்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!