வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (31/03/2017)

கடைசி தொடர்பு:17:13 (31/03/2017)

மூன்று ஆண்டில் ரூ. 4 லட்சம் கோடிக்கு ஆயுதம்! நவீனமாகிறது இந்திய ராணுவம்

இந்திய ராணுவம்

த்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில், கிட்டத்தட்ட நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ஆயுதங்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்தத் தொகையானது, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்றைக்கு, ஆசிய கண்டத்தில், அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 

'நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கையில், ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்குவது சரியா?' என்று ஒருதரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். 'அதிகரித்துக்கொண்டே செல்லும் ராணுவத்தளவாடங்களின் விலை மற்றும் அவற்றின் பராமரிப்புக்கு இந்த நிதி போதுமானதாக இல்லை. எனவே, இன்னும் அதிக நிதி ஒதுக்க வேண்டும்' என்று ராணுவத்தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்குவது நல்லதுதான் என்றாலும், அதன்மூலம் இந்தியா வலிமை பெற்று விடுகிறதா? ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் போட்டாபோட்டி நிலையை உருவாக்குகின்றதா என்ற கேள்விகளும் எழுகின்றன. 

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கின்றன. இந்த இரு அண்டைநாடுகளும் அதிக அளவில் ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதுடன், தங்களின் ராணுவ பலத்தையும் மேம்படுத்தும்போது,  பாதுகாப்பு தளவாடங்கள் விஷயத்தில் இந்தியா பின்தங்கினால், அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாகி விடும். எப்போது போர் தொடுக்கலாம் என்ற சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி, அந்த நாடுகள் காத்திருக்கும் நிலையில், எந்தநேரம் போர் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறனுடன் இந்தியா இருப்பது மிக மிக அவசியம். 


நம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் இயந்திரத் துப்பாக்கியைவிட, பாகிஸ்தான் வீரர்களிடம் இருக்கும் துப்பாக்கி அதிக ஆற்றல் கொண்டது. இப்போதுதான், இந்தத் துப்பாக்கிகளை மாற்றும் முடிவுக்கே நாம் வந்திருக்கிறோம். இதேபோல், பல விஷயங்களில் இந்தியா தன்னை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. 

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின் மூன்று ஆண்டுகளில், 59 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் (இந்திய மதிப்பில் நான்கு லட்சம் கோடிக்கும் மேல்) ஆயுதங்கள் வாங்குவதற்கான 136 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில், மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், "நான்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள 136 திட்டங்களில், 96 திட்டங்கள் இந்திய தயாரிப்புகளை வாங்குவது, அயல்நாட்டில் வாங்கி, இந்தியாவில் தயாரிப்பது என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை, 342 நிறுவனங்களுக்கு ஆயுத தளவாடங்கள் தயாரிப்புக்கான உரிமம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். 

இந்திய கடற்படை

நாட்டின் பாதுகாப்புக்கு என்பதையும் தாண்டி, இந்திய ராணுவ வீரர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். புயல், மழை, வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் பகுதிகளில், மக்களைக் காப்பாற்றும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி, பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும்  கொண்டு செல்லும் பணியிலும் நமது விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 604 டன் அளவுக்கு ரூபாய் நோட்டுக்களை இந்திய விமானப்படையின் சரக்கு விமானங்கள் சுமந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ராணுவத் தளவாடங்கள் அதிநவீனமயமாவதை ஒரு இந்தியனாக அனைவரும் வரவேற்போம்!

- பா.பிரவீன் குமார்


டிரெண்டிங் @ விகடன்