வெளியிடப்பட்ட நேரம்: 23:18 (04/04/2017)

கடைசி தொடர்பு:09:07 (05/04/2017)

அமெரிக்கா இதில் தலையிட வேண்டாம் - இந்தியா எதிர்ப்பு!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னை, பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து வரும் சம்பவங்கள்  பற்றி  ஐ.நா சபை தொடர்ந்து கவலை தெரிவித்துவருகிறது. இந்நிலையில், ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, கடந்த 3-ம் தேதி அளித்த பேட்டியில், 'இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும்' என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, அமெரிக்கா முயற்சி மேற்கொள்ளுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்குப் பதில் கூறிய நிக்கி ஹாலே, “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டம் குறித்து அமெரிக்காவில் புதிதாக அமைந்துள்ள டிரம்ப் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.  பேச்சுவார்த்தை நடத்தி, பதட்டத்தைத் தணிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். முந்தைய ஒபாமா அரசும் அதையே விரும்பியது. அந்த விஷயத்தில் டிரம்ப் ஆர்வமாக இருக்கிறார். பேச்சுவார்த்தையில்  பங்கேற்க அமெரிக்கா ஆர்வமுடன் இருக்கிறது. ஏதாவது நடக்கும்வரை நாம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. பிரச்னை பெரிதாகி, தீர்க்கப்படாமல்  நீடித்துவருகிறது. அதை, இப்படி எத்தனை ஆண்டுகள்தான் விட்டுக்கொண்டு இருப்பது. அமைதியை உருவாக்கவேண்டியது நமது கடமை. பேச்சுவார்த்தையில் ஒரு அங்கமாக நாங்கள் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அமைதிப் பேச்சுவார்த்தையில், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்க ஆர்வமுடன்  இருக்கிறார்கள். அதிபர் டிரம்ப் பங்கேற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று கூறினார்.

அமெரிக்காவின் இந்தக் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. 'பாகிஸ்தான் - இந்தியா இடையிலான பிரச்னைகளில் மூன்றாம் தரப்பின் பங்களிப்புக்கு இடம் தர மாட்டோம்' என்று பதில் அளித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லய் கூறுகையில், “இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளை, வன்முறை இல்லாமல் அமைதி வழியில் பேசித் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானுடனான பிரச்னை, இரு தரப்புக்கும் இடையே மட்டுமே பேசித் தீர்க்கப்பட வேண்டும். இதில், மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை”  என்று தெரிவித்தார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க