சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்! போர் பதற்றத்தில் மத்திய தரைக்கடல்

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்


ன் சொந்த மக்கள் மீது ரசாயனக் குண்டுவீசித் தாக்குதல் நடத்திய சிரியா மீது, அமெரிக்கா இன்று (07-04-17) அதிகாலை ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியா விமானப்படைத் தளத்தின் மீது 60 ஏவுகணைகள் வீசி இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

சிரியாவில் ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சிரியா ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் சிரியாவைவிட்டு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர். 

சிரியா கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில், தடைவிதிக்கப்பட்ட ரசாயனக் குண்டுகளைவீசித் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால், இதுவரை நடத்தப்பட்ட எந்த ஒரு தாக்குதலுக்கும் சிரியா பொறுப்பேற்கவில்லை. ஆனால், தன்னிடம் எந்த ஒரு ராசயான ஆயுதமும் இல்லை என்று கூறுகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில், ராசயனக் குண்டுகளைவீசித் தாக்குதல் நடத்தியது. இதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில், குழந்தைகளும் பெண்களும் அடக்கம்.

சிரியா தொடர்ந்து ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், சிரியா அதிபருக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதால்... இந்த நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. சிரியாவின் ரசாயனத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. சிரியா மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சித்தன. 

"சிரியா மீது தாக்குதல் நடத்தினால், மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று ரஷ்யா அறிவித்த ஒருசில மணி நேரங்களில், மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களில் இருந்து இன்று அதிகாலை, சிரியா நேரப்படி 3.45-க்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 60 க்ரூஸ் ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரசாயனக் குண்டுகளை வீசிய, போர் விமானம் புறப்பட்ட ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

தாக்குதலுக்கு ஆளான, சிரியாவின் விமானப்படைத் தளம்

"அழகிய பச்சிளம் குழந்தைகள் ரசாயனக் குண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மனித இனத்துக்கே இது மிகவும் அவமானகரமான சம்பவம். இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, ''ஏன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது'' என்று விளக்கம் அளித்த டிரம்ப், "கடவுளின் குழந்தைகள் மீது எந்த ஒரு கொடூரத் தாக்குதலும் மேற்கொள்ளப்படக் கூடாது. நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு நாடுகளும் இந்தத் தாக்குதலில் பங்கெடுத்து, சிரியாவில் ரத்த ஆறு ஓடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், பயங்கரவாதம் அது எந்த வகையில் இருந்தாலும் சரி, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றும் அழைப்புவிடுத்துள்ளார். மேலும், "சிரியா தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்காகவும் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்காகவும் பிரார்த்தனைச் செய்கிறோம். அமெரிக்கா எப்போதும் நீதியின் பின்னால் நிற்கும். பிரச்னைக்கு முடிவுகட்டப்பட்டு, அமைதி, நல்லிணக்கம் நிலைநிறுத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதல் மூலம் சிரியாவின் விமானப்படை மற்றும் ஆயுதக் கிடங்கு பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி, ரசாயனத் தாக்குதல் நடைபெறாத அளவுக்கு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை "மிகப்பெரிய ஆக்கிரமிப்பு" என்று சிரியா தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருப்பதால், மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. 

- பா.பிரவீன் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!