Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயிரை உருக்கிக் கொல்லும் சரின்... சிரியா ரசாயன ரகசியங்கள்

அம்மணமாய் கிடக்கிறான். ஆனால், அவனுடைய அம்மணம் வெளியே தெரியவில்லை. உடலுக்குள் ஓடவேண்டிய ரத்தம், அவன் உடல் அம்மணத்தை மறைத்து வெளியே ஓடியது. அவன் பெயர் மஸின் யூசிஃப். 13 வயது அவனுக்கு. உடலின் எரிச்சல் தாளாமல் கதறுகிறான். அவன் மீது தண்ணியை ஊற்றுகிறார்கள். அவனுக்கு பாதிப்பு கம்மி தான்.... அதாவது பாதிக்கப்பட்ட மற்றவர்களோடு ஒப்பிடும் போது. சிறிது நேரத்தில் அமைதியாகிறான். ஒரே நாளில் நலம் பெறுகிறான். மருத்துவமனை அறையிலிருந்து வெளியே வருகிறான். நீலம், சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டபடி, மருத்துவமனை அறைகளை சுற்றி வருகிறான். அவனுடைய தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தங்கை என எல்லோருமே கடுமையாக பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் கிடக்கிறார்கள்.  சாம்பல் நிற கருவிழிகளைக் கொண்ட அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் கொட்டுகிறது. என்ன செய்வதென தெரியாமல், அங்கிருக்கும் படிக்கட்டில் அமைதியாக உட்கார்ந்து, அருகே இருக்கும் ஜன்னலின் வழியே, மணலும், புகையும் சூழ்ந்த அந்த கந்தக பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். துருக்கி - சிரியா எல்லையில் இருக்கும் ரெஹன்லி மருத்துவமனையில் மஸின் யூசிஃபை போன்று இன்னும் பலரும் இருக்கிறார்கள். இன்னும் பலர் இறந்து போய் கிடக்கிறார்கள்... 

சிரியா ரசாயன குண்டு

"கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லி ரசாயன குண்டுகளை சிரிய அரசு வீசியது. அது பொது மக்களை காவு வாங்கியது. 100 பேருக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 600 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்." இது அமெரிக்காவின் கூற்று. " மனிதத்திற்கு எதிரான நடவடிக்கை" என்று இதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மறுநாளே சிரியாவில் ஏவுகணை தாக்குதலை நடத்தினார். 

அமெரிக்காவின் குற்றச்சாட்டை சிரிய அரசாங்கம் மறுக்கிறது. சிரிய அரசாங்கத்திற்கு துணை நிற்கும் ரஷ்யாவோ, " சிரியா கிளர்ச்சியாளர்கள் மீது குண்டுகளை வீசியது, அது கிளர்ச்சியாளர்களின் ரசாயன குடோனில் விழுந்தது. அதிலிருந்து வெளியேறிய ரசாயனங்களால் தான் அப்பாவி மக்கள் இறந்துள்ளனர்" என்கிறது. கடந்த மூன்று நாட்களாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் அரசியல் இது தான். அரசியல் அப்படித் தான். அமெரிக்கா சரியா?, சிரியா சரியா?, ரஷ்யா சரியா? என்பதை ஆராய்வதைவிட பாதிக்கப்பட்ட மக்களின் வலியை உணர்வது தான், இப்போதைக்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது. 

இந்தியாவின் இன்றைய தலைமுறையினருக்கு உள்நாட்டுப் போர், கலவரம், போராட்டம், ரத்தம் , ஷெல்லடி , ரசாயன குண்டுகளைப் பற்றிய விஷயங்களை உணர்வுப்பூர்வமாகத் தொடர்புபடுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவே... இருந்தும் இன்று சிரியாவில் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மக்களின் வலி எத்தகையது என்பதை உணர அந்த ஆயுதத்தின் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

சிரியா ரசாயன குண்டுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள்

நரம்பின் உள் புகும் விஷம்...

தற்போது சிரியாவில் உபயோகப்படுத்தியிருக்கும் குண்டுகளில் சரின் ( Sarin ) என்ற ரசாயனம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சரின்... ஒரு ரசாயன எமன். "நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ரசாயன வினைபொருட்களில்" ( Nerve Agents ) சரின் ஒரு மிக மோசமான அரக்கன். 1938ல், ஜெர்மனியில் சில ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து கண்டுபிடித்தது தான் இந்த சரின் ரசாயனம். 1939ல் ஜெர்மனியின் ஆயுத உற்பத்திக் குழுவில் சரினைக் கொண்டு குண்டுகளைத் தயாரிக்கும் ஒரு முடிவெடுக்கப்பட்டது. அதைத் தயாரிக்க மிகப் பெரிய ஆலைகளை ஜெர்மனி அரசு கட்டமைத்தது. ஆனால், அதிலிருந்து குண்டுகள் தயாராகி வருவதற்குள் இரண்டாம் உலகப்போரே முடிவுக்கு வந்திருந்தது. 

சிரியா ரசாயன குண்டு சரின் ஒரு அரக்கன்

துளியளவிற்கான சரின் நிமிடங்களில் மரணத்தை கொடுத்துவிடும். அந்த மரணம் நிச்சயம் கொடுந்தண்டனையாக இருக்கும். சரின் ரசாயனத்தை சுவாசிக்கும் நொடி கண்களின் கருவிழிகள் இறுக ஆரம்பிக்கும், வாயில் நுரை தள்ளும், கை, கால்களில் வலிப்பு ஏற்படும், உடல் முழுக்க பற்றி எரிவது போன்ற எரிச்சல் ஏற்படும். மொத்த நரம்பு மண்டலமும் செயலிழந்துப் போகும். தோல் உருகி ரத்தம் சொட்ட, தன்னிலையில்லாமல் சிறு நீரும், மலமும் உடலிலிருந்து வெளியேறும். இதை அனுபவித்து முடிக்கும்போது, மரணம் பரிசாகக் கிடைக்கும். 

இப்படித்தான் சிரியாவில் அந்த 17 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பார்கள். அன்று ஈழத்திலும் ஷெல்லடிகளில் அந்த மக்கள் இப்படித் தான் மடிந்திருப்பார்கள். இன்னும், இன்னும் பல நாடுகளில், பல போர்களில் வெறு நாளிதழ் செய்திகளாக நாம் கடக்கும் ஒவ்வொரு இறப்பிற்கும் பின்னால் இப்படியான மரணத்தின் வலிகள் இருக்கின்றன. 
சிரியாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தற்போது நடந்திருக்கும் இந்த தாக்குதல், இட்லிப் மாகாணத்தின் கான் ஷெய்கோன் நகரில் நடந்துள்ளது. சரியான மருத்துவ வசதிகள் இல்லாததால், துருக்கி எல்லைக்கு வருகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 

சிரியா போர் கொடூரங்கள்

" போர் என்றால் மக்கள் சாவத் தான் செய்வார்கள்" என்று ஒரு தமிழக முதல்வரே கூட சொல்லியிருக்கிறார். அறமற்ற அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சாதாரண மனிதர்களின் உயிர் போகத்தான் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. போர் நடக்கும் பகுதியில் எளிய மக்களின் உயிர் விலை பூஜ்யம் என்பதும் யதார்த்தம் தான். ஆனால், குறைந்தபட்சம் அவர்களுக்கு இது போன்ற கொடூர மரணங்களையாவது தராமல் இருங்கள். கொல்லுங்கள்... கொஞ்சம் மென்மையாக கொல்லுங்கள். 

 

சரின் எனும் அரக்கன்...

1. 1988 மார்ச் மாதத்தில் வட இராக்கில் இருக்கும் ஹலப்ஜா நகரில் சரின் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரம் பேர் ரசாயன வலியை சந்தித்து மரணித்தனர். 

2. சரின் ரசாயனத் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு மாற்று மருந்தாக ( Antidote ) அட்ரோபைன் ( Atropine ) மற்றும் ஆக்ஸிம் ( OXIME ) ஆகியவை உபயோகிக்கலாம். 

3. 1976ல் சிலி நாட்டின் உளவுத் துறை டினா ( DINA ) இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஸ்பிரே கேன்களில் சரினை நிரப்பி, நிறைய அரசியல் கொலைகளை செய்ததாக ஒரு தகவல் உண்டு. 

4. 1953ல் ரொனால்ட் மேடிசன் எனும் 20 வயது விமானப்படை வீரரின் மீது சரின் செலுத்தி ஆராய்ச்சியை மேற்கொண்டது இங்கிலந்து ராணுவம். சில நிமிடங்களிலேயே அவர் இறந்துவிட்டார். 

 

- இரா. கலைச் செல்வன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement