வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (10/04/2017)

கடைசி தொடர்பு:17:47 (10/04/2017)

உலகமே உற்றுநோக்கிய ’ஒரு பெண்ணின் பார்வை’

கடந்த சனிக்கிழமை பிரிட்டன் பர்மிங்ஹாமில் ‘ஆங்கிலப் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அந்த இயக்கத்தின் தலைவரை, இஸ்லாமியப் பெண் ஒருவர் பார்த்த பார்வை இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

a viral look

 

பிரிட்டன் இஸ்லாமியமயம் ஆக்கப்படுவதை எதிர்த்து ஆங்கிலப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து பிரிட்டனின் பர்மிங்ஹாமில் பேரணி நடத்தினர். அப்போது, அந்தக் கூட்டத்தில் ‘ஹிஜாப்’ அணிந்த பெண் ஒருவர் அக்கூட்டத்தினருக்கு எதிராகக் கத்தியபடி வந்தார். ஒரே நிமிடத்தில் ஆங்கிலப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இருபது பேர், அந்தப்பெண்ணைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது, சாஃபியா கான் என்ற மற்றொரு பெண் ஓடிவந்து கூட்டத்தில் சிக்கிய பெண்ணைப் பாதுகாத்தார். 

இதையடுத்து, ஆங்கிலப் பாதுகாப்பு இயக்கத்தினரின் கோபம் சாஃபியா கான் மீது திரும்பியது. அப்போது, அந்தப்பெண்ணைத் தாக்க முற்பட்ட இயக்கத் தலைவரை சாஃபியா கான் பார்த்த பார்வைதான் இன்றைய டாப் வைரல் ஹிட்.

எதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் பரவுவதை சற்றும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறுகிறார் சாஃபியா கான். மேலும் அவர் கூறுகையில், ’இயக்கத்தினருக்கு நடுவில் சிக்கிய ஒரு பெண்ணை போலீஸார் யாரும் மீட்க வராததால் சென்றேன். மற்றபடி போராட்ட ஊர்வலத் தலைவர் என்னைத் தாக்க வந்தபோது சற்றும் பயப்படாமல் அவரை எதிர்கொண்டேன்’ என்றார்.

அதிகாரத்துக்கும் இனவாதத்துக்கும் எதிரான பார்வை என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.