Published:Updated:

மன அழுத்தம், சாப்பிடவில்லை, ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தன!- மீட்கப்பட்ட 86 புலிகளுக்கு நேர்ந்த சோகம்

தாய்லாந்து புத்தர் கோயிலில் இருந்து வனத்துறையினரால் மீட்கப்பட்ட 86 புலிகளும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tiger
Tiger

தாய்லாந்தின் காஞ்சனபுரி நகருக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, அந்தப் பழைமையான புத்தர்கோயில். புலிகளின் கோயில் என அறியப்பட்ட இந்தக் கோயிலில், சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாகக் கூறி, அங்கிருந்த புலிகள் அனைத்தும் வனத்துறை அதிகாரிகளால் 2016-ம் ஆண்டு மீட்கப்பட்டன. தாய்லாந்தில் செயல்படும் பழைமையான புத்த பள்ளிகளில் இதுவும் ஒன்று. 2016-ம் ஆண்டுக்கு முன், இங்கு ஏராளமான புலிகள் வளர்க்கப்பட்டுவந்தன. அந்தப் புலிகள் எல்லாம் தம் இயல்புக்கு மீறி சாந்தமாகக் காட்சியளித்தன. புத்த பிட்சுகள் புலிகளுடன் இயல்பாக நடந்துசெல்வதும், கொஞ்சி மகிழ்வதுமாக இருந்தனர். சுற்றுலாப் பயணிகளை இந்த இடம் வெகுவாகக் கவர்ந்தது. அவர்கள், புலிகளுடன் நெருக்கமாக இருந்து புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கு, தனியாக கட்டணம் வசூலித்துவந்தனர். ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர்கள் வரை வருமானம் பார்த்தது அந்தக் கோயில். புலிகள் தங்கள் இயல்புக்கு மீறி காணப்படுவது, விலங்குகள் நல ஆர்வலர்களுக்குத் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பியது. இதுதொடர்பாக தாய்லாந்து அரசுக்கு புகார்கள் சென்றன.

Tiger Temple
Tiger Temple
AP

1999-ம் ஆண்டு அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குட்டி ஒன்றை கிராம மக்கள், கோயிலுக்குக் கொடுத்துள்ளனர். ஆனால் அந்தப் புலிக்குட்டி, சில நாள்களில் இறந்துவிட்டது. தாய்லாந்தில், விலங்குகள் கடுமையாக வேட்டையாடப்பட்டுவந்தன. பாங்காங்கில் சட்ட விரோதமாக நடக்கும் சந்தைகளில், விலங்குகளின் உடல் உறுப்புகள் சாதாரணமாகக் கிடைக்கும். புலிகளுக்கு இங்கு கடும் கிராக்கி இருந்தது. இதன் காரணமாக, வேட்டைக்காரர்களின் பார்வை புலிகளின்மீது விழுந்தன. தோல்கள் மற்றும் நகங்களுக்காகப் புலிகள் அதிக அளவில் கொல்லப்பட்டன. இந்தச் சமயத்தில்தான் தாய்களை இழந்த குட்டிகள், அப்பகுதி மக்களால் இந்தக் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன.

இந்தக் கோயிலில் வளர்க்கப்பட்ட புலிகள், இயற்கைக்கு மாறாக இருந்ததுதான் சந்தேகத்திற்குக் காரணமாக அமைந்தது. புலிகள், புத்த பிட்சுகளால் துன்புறுத்தப்படுவதாகவும், அங்கு சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த புத்த பிட்சுகள், `இங்கு எந்த தவறான நடவடிக்கைகளும் நடக்கவில்லை' என்றனர். ஆனால், வனத்துறையினர் கோயிலுக்குச் சென்று சோதனை நடத்தவோ, விசாரணை மேற்கொள்ளவோ அனுமதிக்கவில்லை. 2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அங்கு 147 புலிகள் இருந்ததாகத் தெரிகிறது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு, தாய்லாந்து அரசு புத்தக் கோயில் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டது. 2014-ல், அங்கிருந்த மூன்று புலிகள் காணாமல் போயின. இதையடுத்து, அங்கிருந்த புலிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. புலிகள் காணாமல் போனது தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர், 16 மாதங்கள் விசாரணை நடத்தினர். ஆனால், எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.

Tiger
Tiger
AP

சில தன்னார்வ அமைப்புகள் விசாரணையில் இறங்கின. அதில் தான் இந்த மூன்று புலிகள் கொல்லப்பட்டு, நள்ளிரவில் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது. முன்னாள் ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் நடத்திய விசாரணையில், அங்கு 200-க்கும் அதிகமான புலிகள் இருந்ததாகக் கூறியுள்ளனர். 2004-ம் ஆண்டு முதல், புலிகள் இங்கிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்படுவதும் அவர்கள் மூலம் தெரியவந்தது. இவற்றையெல்லாம் வீடியோவாகப் பதிவுசெய்து, அரசுக்கு அளித்தனர். இதையடுத்து, தாய்லாந்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. புலிகளை அங்கிருந்து கொண்டுசென்று காடுகளில் விட நடவடிக்கை எடுத்தது. இதற்கு, புத்த பிட்சுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2016-ம் ஆண்டு, புலிகளை மீட்கும் நடவடிக்கையில் தாய்லாந்து வனத்துறை இறங்கியது. சுமார் 500 பேர் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்பட்டனர். கோயிலில் சோதனை செய்தபோது, அங்கிருந்த ஓர் அறையில் 40 புலிக்குட்டிகள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அங்கிருந்த 147 புலிகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

Tiger
Tiger
Facebook/DNP1362

மீட்கப்பட்ட புலிகள் அனைத்தும் ரட்சபுரியில் உள்ள வன உயிரினப் பூங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இந்நிலையில், புத்தர் கோயிலில் இருந்து மீட்கப்பட்ட புலிகளில், 86 புலிகள் இறந்துவிட்டதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் பேசுகையில், ``புத்தர் கோயிலில், வன விலங்குகளுக்கான சூழலில் புலிகள் வளர்க்கப்படவில்லை. வாழ்வியல் சூழல் மாறியதால், வைரஸ் பாதிப்புகளால் புலிகள் இறந்துவிட்டன. இங்கு அவை கொண்டுவரப்பட்டபோது கடுமையான மன அழுத்தத்தில் இருந்தன. அவற்றுக்கு சுவாசப் பிரச்னை இருந்தது. சுவாசிக்கும்போது குரல்வளை சிரமத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் இந்த அறிகுறிகள் மோசமானது. அவை சாப்பிட மறுத்தன. சில நாள்களில் அவை ஒன்றன்பின் ஒன்றாக இறந்துவிட்டன” எனத் தெரிவித்துள்ளனர்.