வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (12/04/2017)

கடைசி தொடர்பு:09:11 (12/04/2017)

அணு ஆயுதப் போருக்கு மாறி மாறி சவால்விடும் வடகொரியா - அமெரிக்கா

'அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும்' என்று வட கொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், 'கொரிய கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலில், அணு ஆயுதங்களைக்கொண்டு தாக்கும் விமானம் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக, அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. வடகொரிய அரசு, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அணு ஆயுதச் சோதனை நடத்திவருகிறது. வட கொரியாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்க உள்பட, மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவந்தன. இருப்பினும் வட கொரியா, அமெரிக்க அரசின் கண்டனம் குறித்து கவலைகொள்ளாமல், தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்திவந்தது.

அதிலிருந்து, வட கொரியாவின் அணு ஆயுதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தொடர்ச்சியாக முயற்சித்துவருகிறது. அதன்காரணமாக, தென் கொரியாவுடன் ஒரு நட்புறவைக் கடைபிடித்துவருகிறது. இதுதொடர்பாக, சமீபத்தில் சீன அதிபர் சி ஜின்பிங் (Xi Jinping) உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வட கொரியாவின் அணு ஆயுதத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன. தற்போது, அமெரிக்க அரசு தனது கடற்படையை கொரிய தீபகற்பப் பகுதிக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயல், கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கியது. தற்போது, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'வட கொரியா உடனான பிரச்னையைத் தீர்க்க சீனா உதவினால், அந்த நாட்டுடான வர்த்தகம் சிறப்பாக நடைபெறும். வட கொரியா நெருக்கடிகளைத் தரப் பார்க்கிறது. இந்த விஷயத்தில் சீனா உதவினால் நன்றாக இருக்கும். சீனா உதவவில்லையென்றால், அந்த நாட்டு அரசின் உதவி இல்லாமல் இந்தப் பிரச்னையை நாம் சமாளிப்போம்' என்று பதிவிட்டுள்ளார்.

 

அமெரிக்காவின் போர்ப்படை குறித்து தெரிவித்த  பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் மேட்டிஸ், 'கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பியுள்ள போர்க் கப்பலில், அணு ஆயுதத்தைக்கொண்டு தாக்கும் விமானம் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.  மேலும், வட கொரியாவின் அணு ஆயுதத் தாக்குதல் மிரட்டலை அமெரிக்கா புறக்கணித்துள்ளது. வட கொரியாவிடம் அணு ஆயுதம் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வட கொரியாவின் செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் வட கொரியாவும் மாறி மாறி அணு ஆயுதத்தைக்கொண்டு மிரட்டுவது, உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.