தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய கனடா பிரதமர்

தமிழர்களின் வாழ்வியலை கொண்டாடுவதில் வெளிநாடுகளை பொறுத்தவரையில் கனடாவிற்கு முக்கிய இடமுண்டு. ஈழத்தமிழர்கள் முதல் பல்வேறு நாட்டின் அகதிகளுக்கும் மற்ற நாடுகள் குடியேற எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அகதிகளாக வெளியேறுபவர்களை தங்களது நாட்டில் குடியேற அழைப்பு விடுக்கிறது கனடா.

justin

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் ஒன்றான கனடாவில் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன விழாக்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் அன்று வாழ்த்துகள் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே, இனி வரும் வருடங்களில் ஜனவரி மாதம் (2017ம் ஆண்டு முதல்) கனடாவில் 'தமிழ் மரபுத் திங்கள்' என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவித்தார். இதற்கான, மசோதா கனடா பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஏகோபித்த ஆதரவு மூலம் நிறைவேறியது.

இந்நிலையில், ஜஸ்டின் ட்ருடே கூறிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

’உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களின் புத்தாண்டு தினத்தை வரவேற்கிறேன். இந்த புத்தாண்டில், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் கூடி கொண்டாடுவதோடு மட்டுமின்றி வரும் வருடம் அவர்களுக்கு சிறப்பாக அமைய கடவுள் வழி காட்டுவார்.

கனடா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் பல்வேறு இன,மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உள்ளது. இந்நிலையை ஏற்படுத்தியதில் தமிழர்களின் பங்கு மிகப்பெரியது. அதற்காக அவர்களுக்கு நன்றி.

அரசின் சார்பாக ஒரு அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டை கொண்டாட கனடா அரசின் சார்பாக தமிழர்களுக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று தன்னுடைய வாழ்த்தில் ஜஸ்டின் ட்ருடே தெரிவித்துள்ளார்.

 

 - மு.ராஜேஷ்
மாணவப் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!