ஆப்கன் மீதான அமெரிக்காவின் தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பலி?! | ISIS Kerala recruits feared dead in Afghanistan attack

வெளியிடப்பட்ட நேரம்: 02:27 (15/04/2017)

கடைசி தொடர்பு:08:41 (15/04/2017)

ஆப்கன் மீதான அமெரிக்காவின் தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பலி?!

ஆப்கானிஸ்தானில், ஐஎஸ் தீவிரவாதக் குழு இயங்கிவந்ததாகக் கருதப்படும் பகுதியில், அமெரிக்கா கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது, 'வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாய் (Mother of all bombs)' என்று அழைக்கப்படும் GBU-43 வெடிகுண்டை அமெரிக்கா வீசியது. அணுகுண்டுகள் இல்லாத ரகத்தில் இதுதான் மிகப் பெரிய வெடிகுண்டு. சுமார் 9,797 கிலோ எடை கொண்ட இந்தப் பிரமாண்ட வெடிகுண்டில், 9 ஆயிரம் டன் வெடிபொருள்கள் அடங்கியிருக்கும்.

வெடிகுண்டுகளின் தாய் எனப்படும் GBU-43

இந்தத் தாக்குதலில், குறைந்தபட்சம் 36 தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தில், கேரளாவில் இருந்து சென்று ஐஎஸ் அமைப்பினருடன் இணைந்து செயல்பட்ட 21 பேரில், இரண்டு இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று, அதன்பின் காணாமல் போன 21 பேரும், ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முர்ஷித் முஹம்மத் என்ற இளைஞர் உள்ளிட்ட இரண்டு பேர், ஆப்கன் மீதான அமெரிக்கத் தாக்குதலில், பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியக் குழு ஒன்றை அனுப்பவும் இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.