வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (15/04/2017)

கடைசி தொடர்பு:20:13 (17/04/2017)

பாயும் காளைக்கு முன் பயமறியா சிறுமி... வெடித்தது புதிய சர்ச்சை!

நியூயார்க் நகரில் வால்ஸ்ட்ரீட் தெருவில் பாயும் காளை சிலைக்கு எதிராக நிறுவப்பட்டுள்ள சிறுமி சிலையை உடனடியாக அகற்ற வேண்டுமென காளை சிலை வடிவமைப்பாளர்  Arturo Di Modica கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வால் ஸ்ட்ரீட் தெருவில் உள்ள பயமறியா சிறுமி சிலை

பங்குச்சந்தை வர்த்தகத்தில் இரு குறியீடுகள் முக்கியமானவை. ஒன்று பாயும் காளை; இன்னொன்று கரடி. பங்குச்சந்தையில்நல்ல நிலை காணப்படுகிறது. பங்குகளின் விலை உயரத் தொடங்கி, பங்கு வர்த்தகத்தில் முதலீடு பெருகும் போது காளையின் பிடியில் சந்தை இருக்கிறது என்று அர்த்தம். மாறாக பங்குகளின் விலை சரியத் தொடங்கினால் பங்குச் சந்தை கரடியின் கையில் இருப்பதாக அர்த்தம். பங்குச் சந்தை கரடிப் பிடியில் இருக்கும் போது, விற்பவர்கள் அதிகம் இருப்பார்கள். முதலீடு செய்பவர்கள் குறைந்துவிடுவார்கள். அதனால் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை 'காளை' நல்லது. 

வால்ஸ்ட்ரீட் தெருவில்தான் உலகிலேயே மிகப் பெரிய பங்குச்சந்தையான நியூயார்க் நகர பங்குச் சந்தை உள்ளது. இந்தத் தெருவில்  பாயும் காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டுவாக்கில் பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. நெருக்கடியில் இருந்து பங்குச்சந்தை மீண்டு வரவேண்டும் என்பதற்காக  காளையின் சிலை நிறுவப்பட்டது. அரை டன் கொண்ட வெண்கலச்சிலை இது. Arturo Di Modica என்பவர் இதனை வடிவமைத்தார். இதற்கான காபிரைட் உரிமையும் இவரிடம்தான் உள்ளது

பாயும் காளை சிலை முன்பாக பயமறிய சிறுமி

இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 7ம் தேதி  காளைச் சிலைக்கு எதிர்ப்புறமாக சிறுமி சிலை ஒன்றும் நிறுவப்பட்டது. கைகளை தன் இடுப்பில் ஊன்றிக்கொண்டு துணிச்சலாக நிற்பது போல, சிறுமி சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. 'பயமறியா சிறுமி' என்பது இந்தச் சிலையின் பெயர். பாஸ்டன் நகரைச் சேர்ந்த State Street Global Advisors என்ற நிறுவனம் சிறுமி சிலையை நிறுவியது. கார்ப்பரேட் நிறுவனங்களில் பெண்களின் தலைமைப் பண்பை உலகுக்கு உணர்த்துவதே சிறுமி சிலை அமைக்கப்பட்டதன் நோக்கம். 

வால்ஸ்ட்ரீட் தெருவுக்கு வருபவர்கள் முன்பு, காளை சிலையின் அருகில் நின்று படம் எடுத்துக்கொள்வார்கள். செல்ஃபி எடுப்பார்கள். சிறுமி சிலை நிறுவப்பட்டதில் இருந்து காளை சிலைக்கு மவுசு குறைந்தது. சிறுமி சிலைக்கு மவுசு அதிகரித்தது. குறிப்பாக பெண்கள் சிறுமி சிலையைக் கொண்டாடினார். இந்தச் சிலையைப் பார்க்கும் போது தங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிப்பதாக பெண்கள் தெரிவித்தனர். எல்லோரும் சிறுமி சிலையைக் கொண்டாட,  காளைச் சிலையைக் கண்டுகொள்வார் குறைந்தனர். 

வால்ஸ்ட்ரீட் தெருவில் உள்ள பயமறியா சிறுமி சிலை

இதனால், கோபமடைந்த காளை சிலையை வடிவமைத்த, Arturo Di Modica  சிறுமி சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்த போது, நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வகையில் பாயும் காளையை வடிவமைத்தேன். இப்போது பாயும் காளையைத் தாக்குவது போல சிறுமியின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாயும் காளையை மனதில் கொண்டுதான் சிறுமி சிலை உருவாக்கப்பட்டுள்ளது'' என வேதனைப்பட்டுள்ளார். 

ஆனால், நியூயார்க் நகர மேயர் Bill de Blasio சிறுமி சிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.' பெண்களைப் பிடிக்காதவர்கள் அந்த இடத்தை விட்டுப் போகலாம்... சிறுமி சிலையை ஏன் அகற்ற வேண்டும் 'என அவர் கூறியுள்ளார். முதலில், சிறுமி சிலைக்கு ஒரு வாரகாலம்தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  பெரும்வரவேற்பு கிடைத்ததையடுத்து 2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வரை வால்ஸ்ட்ரீட் தெருவில் சிறுமி சிலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

விவகாரத்தை சுமுகமாக முடித்து வைக்க வால்ஸ்ட்ரீட் தெருவின் State Street Global  அமைப்பு நடவடிக்கை எடுத்துவருகிறது. 

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்