வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (16/04/2017)

கடைசி தொடர்பு:18:36 (16/04/2017)

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கடைசி பெண் மரணம்... - அவருக்கு வயது 117

இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்மா மொரானோ என்ற பெண்மணி கடந்த வருடம் உலகின் வயதான மனிதர் மற்றும் வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்திருந்தார். 117 வயதான அவர் நேற்று மரணமடைந்தார்.  


இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோ என்பவர் 1899-ம் வருடம் நவம்பர் மாதம் 29-ம் தேதி பிறந்தார். 117 வயதைத் தொட்ட அவர் டயட் முறையில் உணவு சாப்பிட்டு வந்துள்ளார். 'அவர் தினமும் மூன்று முட்டைகளை சாப்பிடுவார். அதில் இரண்டு முட்டைகளை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவார். எம்மாவுக்கு பிஸ்கட்கள் மிகவும் பிடிக்கும். அவர் பிஸ்கட்டுகளை தனது தலையனைக்குள்ளே ஒழித்து வைத்து சாப்பிடுவார்' என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவருடைய வாழ்க்கை குறித்து ஆங்கில ஊடங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 'என்னுடைய திருமண வாழ்க்கை அத்தனை ஆரோக்கியமாக இல்லை. நான் ஒருவரை காதலித்தேன். அவர் முதல் உலகப் போரில் இறந்து விட்டார். என்னுடைய கணவருடன் 1938 வருடம் விவாகரத்து ஆனது. நான் வேறொரு திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. என்னை யாரும் கட்டுப்படுத்துவது பிடிக்கவில்லை' என்று தெரிவித்திருக்கிறார். எம்மா மொரானோவின் குடும்பத்தில் அவருடைய தாய் மற்றும் சகோதரிகள் அனைவரும் நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர்.

எம்மா மொரானோ தான் 19-ம் நூற்றாண்டின் கடைசிப் பெண் என்று கின்னஸ் சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. உலகின் மிக வயதான மனிதர் மற்றும் வயதான பெண் என்று கின்னஸ் சாதனை விருது எம்மாவுக்கு 2016-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவர் இத்தாலியில் வெர்பேனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மரணமடைந்தார்.