வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (19/04/2017)

கடைசி தொடர்பு:08:56 (19/04/2017)

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் போர் மூளும் அபாயம்..!

போர் ஒத்திகையில் வடகொரியா

லகநாடுகள் அனைத்துமே தற்போது ஒருவித அச்சத்தின் பிடியில் இருந்து வருகின்றன. காரணம் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் எந்த நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா தொடர்ச்சியாக அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அமெரிக்காவோ அணுஆயுத சோதனையை கைவிடுமாறு வடகொரியாவை தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறது. என்றாலும் அணுஆயுதங்கள் தயாரிப்பிலும், சோதனையிலும் வடகொரியா தீவிர அக்கறை காட்டி வருகிறது. 

'நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது' என்கிற எண்ணத்தில் வடகொரியாவும், 'நீ என் பேச்சை கேட்டுதான் ஆக வேண்டும்' என்ற எண்ணத்தில் அமெரிக்காவும் செயல்பட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேபோர் உருவானால், அது உலக நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்தச் சூழல் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க ராணுவம்

வடகொரியா பல முறை அணுஆயுத சோதனைகளை நடத்தி இருக்கிறது. இதற்கு ஐ.நா சபையும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இனி இதுபோன்று அணுஆயுத சோதனையில் ஈடுபட்டால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்று அமெரிக்கா பகிரங்கமாகவே எச்சரிகை விடுத்துள்ளது. "எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலுக்கும் நாங்கள் தயார். அதனை முறியடிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. எங்கள் பாணியில் திருப்பி அடித்து பதிலடி தருவோம்" என வடகொரிய ராணுவ அதிகாரி சோய ரொங்-ஹெ தெரிவித்துள்ளார். கடந்த 16-ம் தேதி காலையில் வடகொரியா ஆறாவது முறையாக மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிந்து விட்டது என்று அமெரிக்கா பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்தது. எனினும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

வடகொரிய ராணுவ அணிவகுப்பு

வடகொரியாவின் தந்தை என்றழைக்கப்படும் கிம் இல்-சொங்கின் 105-வது பிறந்தநாள், கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சயில் வடகொரியா தனது ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு நிரூபிக்க வலிமையான ராணுவ அணிவகுப்பை நடத்தியது. அதில் புதியதாக தயாரிக்கப்பட்ட அணுஆயுதங்கள், புதிய ரக பீரங்கிகள், ராணுவ தளவாடங்கள் இடம்பெற்றிருந்தன. இது, பார்ப்பவர்களை மிரள வைக்கும் வகையில் அமைந்தது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் என்ற ஏவுகணையும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை:

வடகொரிய அதிபர்

"நாங்கள் எங்கள் பாதுகாப்புக்காக அணுஆயுதம் தயாரித்து வருகிறோம். யாருக்காகவும் நாங்கள் பயப்படமாட்டோம்" என்று வடகொரியா ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா அடிக்கடி கண்டனம் தெரிவித்து வருவதால், வடகொரியாவும் நேரடியாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவின்படி கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய அணு ஆயுத சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் 'நாங்கள் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவோம். இதைப்பற்றி அமெரிக்கா ஏதேனும் கண்மூடித்தனமான முடிவுகள் எடுத்தால், அந்நாடு போரைச் சந்தித்தே ஆக வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கை:

அமெரிக்க அதிபர்

வடகொரியா மீண்டும் மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு, அமெரிக்காவை போருக்கு அழைக்கும் நோக்கில் பேசி வருவதாக அமெரிக்க கூறியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், "வடகொரியாவுடன் அமெரிக்கா நட்புரீதியில் அமைதியாக இருந்த காலம் கடந்து விட்டது. அமெரிக்காவின் ராணுவ பலத்தை சோதித்துப் பார்க்க விரும்பினால், விளைவு வேறுமாதிரி இருக்கும். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவின் மீது எடுத்த நடவடிக்கையின் மூலம் புதிய அதிபர் ட்ரம்ப்-ன் உறுதியையும், அமெரிக்காவின் பலத்தையும் அனைவருமே புரிந்து வைத்திருப்பார்கள்" என்றார். மேலும், "வடகொரியாவின் மெத்தனப் போக்கிற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்தால் நல்லது. இல்லையென்றால், நாங்களே வடகொரியாவுக்கு பாடம் புகட்ட காத்திருக்கிறோம். அதற்காக, களத்தில் இறங்கத் தயாராக இருக்கிறது அமெரிக்கா" என்றார்.

அமெரிக்க வான்படை

வடகொரியாவும், அமெரிக்காவும் மாறி மாறி எச்சரிக்கை  விடுத்துவருவதால், எந்த நேரமும் இரு நாடுகளுக்குள்ளும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக உலக நாடுகள் பலவும் அச்சம் கொண்டிருக்கின்றன. போரின் தாக்கம் உலக நாடுகள் அனைத்தையுமே பாதிக்கும் என்பதால், இந்தப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு ஏற்படச் செய்வதே மற்ற நாடுகளுக்கும் நல்லது. 

-ஜெ.அன்பரசன்


டிரெண்டிங் @ விகடன்