வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (19/04/2017)

கடைசி தொடர்பு:20:24 (19/04/2017)

உலகம் தெரிய கடத்தப்பட்ட சவுதிப் பெண் தினா லசோம்... உயிருடன் இருக்கிறாரா?

தினா

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி இரவு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு குவைத்திலிருந்து ஒரு பிலிப்பைன்ஸ்  ஏர்லைன்ஸ் விமானம் வந்து இறங்கியது. அந்த விமானத்தில் இருந்து ஒரு பெண் இறங்கினார். அவர் கையில் சிட்னிக்குச் செல்லும் டிக்கெட் இருந்தது. அவர் புக் செய்திருந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காக் சென்று அங்கே டிரான்ஸிட்டிற்காக 8 மணி நேரம் காத்திருக்கவேண்டும். அதன்பின் வேறு ஒரு கனெக்டிங் விமானம் மாறிச் செல்ல வேண்டும். ஆனால் உடனடியாக அவர் ஆஸ்திரேலியா செல்லவேண்டும். எனவே அதற்கு அடுத்த விமானம் மணிலா வழியாக செல்வதைக் கண்ட அவர் அதை புக் செய்தார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. ஏன்?

அந்தப் பெண் தினா அலி லசோம் - சவூதி அரேபியாவைச் சேர்ந்த மிகப்பணக்கார குடும்பம் ஒன்றின் வாரிசு.   குவைத்தில் உள்ள நிறுவனத்தை தினாவின் குடும்பத்தினர் கவனித்து வந்தனர். குவைத்தில் வளரும் சூழ்நிலை ஏற்பட்டதால் கொஞ்சம் முற்போக்காகச் சிந்திக்கும் 'கெட்ட' பழக்கம் தினாவுக்கு வந்துவிட்டது. பிடித்த உடை தொடங்கி,பிடித்த படிப்பு,ஏன் தலைமுடியைக்கூட 'பாய்ஸ் கட்' டாக வெட்டிக்கொண்டார். ஆரம்பத்தில் இதை அனுமதித்த குடும்பம் கடந்த சிலமாதங்களாக அவரை மீண்டும் கட்டுப்பெட்டியான சவூதிப் பெண் போல மாறிக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற தினாவின் கோரிக்கை தூக்கி எறியப்பட்டது.  பணக்கார வரன் ஒன்று அமைய, உடனடியாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்யத்துவங்கினர். இனி இவர்களுடன் இருந்தால் தனது கனவுகள் சிதையும் என நினைத்த தினா உடனடியாக விமானம் ஏறினார். ஆனால் விமான நிலையத்திலிருந்து தினா தனியாக பிலிப்பைன்ஸ் போகும் விமானத்தில் பயணிக்க இருக்கும் செய்தி அவரது குடும்பத்துக்குப் போனது. உடனடியாக சவூதி அரசின் மூலம் குவைத்துக்குப் பேசித் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் விமானம் பறந்துவிட்டது.

 10-ம் தேதி அதிகாலை 3.35க்கு மணிலா சர்வதேச விமானநிலையத்தில் வந்து இறங்கிய தினா, பயணிகள் காத்திருக்கும் பகுதிக்குச் சென்று அமர்ந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய பின் இரண்டு பெண்கள் தன்னைப் பயணிகள் காத்திருக்கும் அறை வரைப் பின் தொடர்ந்து வருவதைக் கண்டார்.  உடனடியாக  தன் நண்பர்களுக்குத் தான் குடும்பத்தின் கட்டாயத்தில் இருந்து தப்பிக்க சிட்னி கிளம்பிவிட்டதையும்,அங்கு அகதியாகத் தஞ்சம் கோரப்போவதையும் ட்வீட்டரில்  மெசேஜாக அனுப்பினார். 

4 மணி அளவில் அவரிடம் வந்த விமான நிலையப்பாதுகாவலர்கள், அடுத்து அவர் பயணம் செய்யவேண்டிய 11 மணி  'வெர்ஜின் ஏர்லைன்ஸ்'  போர்டிங் பாஸைக் கேட்டனர். வழக்கமான செக்கிங் என நினைத்து எடுத்துக்கொடுத்தவரைத் தம்முடன் விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அவர்கள் அழைத்துச் சென்று காலியாக இருந்த 'பயணிகள் புகைக்கும் இடத்தில்' அமர வைத்து,"உங்களின் குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மேற்கொண்டு நீங்கள் பயணம் செய்ய வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டனர்.  மேலும்,அவரை அங்கேயே அமரவும் சொல்லிவிட்டனர்.  அதிர்ந்து போன அந்தப்பெண் தாம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றே ஆகவேண்டும் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், தினாவின் போர்டிங் பாஸை மணிலா அதிகாரிகள் தரவில்லை. 

தனியாக அந்த அறைக்குள் இருந்தபோது புகைப்பதற்காக அங்கு நுழைந்த கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தினா உதவி கோரினார். உடனடியாக தாம் பேசுவதை வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிடக் கோரினார். அந்தப்பெண்ணும் சம்மதிக்கவே தன் முகம் காட்டாமல் ' தன்னைச் சட்டவிரோதமாக தன் குடும்பத்தினர் மணிலாவில் இருந்து கடத்திச் செல்ல உள்ளதாகவும் அதைத் தடுக்க பிலிப்பைன்ஸ் அரசுக்கு  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்' கேட்டுக்கொண்டார். அப்போது மீண்டும் அதிகாரிகள் வந்து இந்தப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்த முயன்றனர்.ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. 'உங்கள் அப்பாவும்,மாமாவும் வந்துகொண்டிருக்கிறார்கள்' என்று சொன்னதற்கு 'என் அப்பா அவரில்லை' என்று அந்தப்பெண் மறுத்துள்ளார். இந்தக் காட்சியையும் அந்தக் கனடா பெண் வீடியோ எடுத்து பின்னர் வெளியிட்டார். 

மணி காலை பதினொன்று, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் சிட்னி விமானம் புறப்பட்டுவிடும் என்பதால் அந்த அறையில் இருந்து வெளியேறிச் செல்ல முயன்றார். ஆனால் பிலிப்பைன்ஸ் பெண் அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக இருக்கையில் அமரச்செய்து கைகளில் ஒட்டும் டேப்பை வைத்துக் கட்டினர். 'என்னை விட்டுவிடுங்கள். என் குடும்பத்தார் என்னைக் கௌரவ கொலை செய்துவிடுவார்கள்' எனக் கத்தியபடி இருந்திருக்கிறார். உடனே அவரின் வாயிலும் அதே டேப் ஒட்டப்பட்டது.

சிறிது நேரத்தில் அங்கு வந்த அவரின் குடும்ப ஆண்கள்  கை,வாய் எல்லாம் கட்டிய நிலையிலேயே அவரை சவூதி செல்லும் விமானத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். அதற்குள் அந்த கனடா பெண் 'சேவ் தினா அலி'  #SaveDinaAli  என்ற ஹேஷ்டேக்கில் இந்தச் சம்பவங்களை ட்விட்டரில் வெளியிட, அது சிலமணிநேரங்களில் இணையத்தில் வேகமாகப் பரவியது. மக்கள் உரிமை கண்காணிப்பகத்திற்கு இந்தத் தகவல் போகவும் அவர்களும் வேகமாகச் செயல்பட்டு சவூதியில் இருக்கும் தங்கள் ஊழியரை விசாரிக்கச் சொல்லியுள்ளனர். ஆனால் எவ்வளவு முயன்றும் ஒரு சின்னத்தகவல் கூட அரசுத்தரப்பில் இருந்து தரவில்லை. 

சவூதியின் ரியாத் விமானநிலையத்தில்  கைகளிலும் கால்களிலும் வாயிலும் டேப் ஒட்டப்பட்ட அந்தப்பெண்ணை சக்கரநாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு போனதை மட்டும் கடைசியாகப் பார்த்துள்ளனர். 24 வயதாகும் அந்தப் பெண் சுயவிருப்பத்தின்படி செயல்பட முடியாத அவலம் இணையத்தில் விவாதப்பொருள் ஆனது. இதற்குத் துணைபோன மணிலா விமான நிலைய அதிகாரிகள் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்