வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (20/04/2017)

கடைசி தொடர்பு:12:34 (20/04/2017)

ஒவ்வொரு வருடமும்‌ நிலங்களைப் பிரசவிக்கும் கடல்... பின்லாந்தில் ஆச்சர்யம்!

உலக வெப்பமயமாதல், அதிகப்படியான இயற்கைச் சீற்றங்கள் என பல காரணங்களால் நாளுக்கு நாள், பல இடங்களில் கடல் மட்டம் உயர்ந்து வர... அதற்கு நேர்மாறாக ஒரு ஆச்சர்ய நிகழ்வு பின்லாந்தில் நடந்துவருகிறது. ஒவ்வொரு வருடமும் கடலிலிருந்து நிலம் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

பின்லாந்திற்கும், ஸ்வீடனுக்கும் இடையே இருக்கும் பொத்னியா வளைகுடா பகுதியில் இருக்கிறது குவார்கன் தீவுகள் (Kvarkan Islands). இதில் அதிக எண்ணிக்கையிலான தீவுக் கூட்டம் பின்லாந்து பக்கமும், சில தீவுகள் ஸ்வீடன் பக்கமும் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் 10மிமீ அளவிற்கான நிலப்பகுதி கடலில் இருந்து வெளிப்படுகிறது. உலகில் வேறெங்கும் நடந்திராத ஓர் ஆச்சர்யம் இது. 

கடல் பிரவித்த தீவுகள்

என்ன நடக்கிறது... ஏன் வெளிவருகிறது நிலம் ?:

அறிவியல் ரீதியாக இதை "Rapid Glacio - Isostatic Uplift" என்று சொல்கிறார்கள். அதாவது, கடைசியாக முடிந்த "பனிக் காலத்தில் " (Ice Age) ஒரு மைல் உயரத்திற்கான பனி மலைகள் இருந்த பகுதி இது. அந்தப் பனி மலைகளின் அதிகப்படியான எடையைத் தாங்க முடியாத நிலப்பகுதி கடலுக்குள் மூழ்கிக் கிடந்தது. தோராயமாக, 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பனி மலைகள் அத்தனையும் உருகத் தொடங்கின. பனிமலைகள் உருகி எடை குறையவே, மூழ்கிய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. 
வருடத்திற்கு 1 சதுர கிமீ பரப்பளவிற்கான நிலம் வெளிவருகிறது. அதாவது, கிட்டத்தட்ட 150 கால்பந்து மைதானங்களுக்கு இணையான பரப்பளவு. ஒவ்வொரு வருடமும் இந்தத் தீவுக் கூட்டங்களில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தப் பகுதியின் வரைபடத்தில் மாற்றம் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கிறது. 

கடல் பிரசவிக்கும் தீவுகள்

இந்தத் தீவில் 2500 பேர் வரை வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இந்த இயற்கையின் அதிசயத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்னர் படகில் கடந்த பகுதியை, இப்போது நடந்துக் கடக்கிறார்கள். நீச்சலடித்து விளையாடிய இடத்தில் இப்போது கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கடலிலிருந்து வெளிப்படும் நிலப்பரப்பானது வெறும் மண் கொண்டதாக மட்டுமே இருக்கும். வெளிவந்து சில தினங்களில் புற்கள் முளைக்கத் தொடங்கும். பின்பு, செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து சில வருடங்களிலேயே ஒரு காடாக உருவாகிவிடுகிறது. 

பின்லாந்து தீவுகளைப் பிரசவிக்கும் கடல்

நிலங்களைப் பிரசவிக்கும் கடல் !!! :

சில நூறாண்டுகளுக்கு முன்னர் வரைக் கூட பனிக் காலங்களில், இந்தக் கடல் பகுதி முழுவதும் உறைந்துப் போய்விடும். பின்லாந்திலிருந்து, ஸ்வீடனுக்கு அந்த வழியே நடந்துப் போனதாகக் கூட குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அதன் பின்னர் பல பருவநிலை மாற்றங்களின் காரணமாகவும், தொடர் கப்பல் போக்குவரத்தின் காரணமாகவும் கடல் உறைந்து போவது நின்றுவிட்டது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட தீவிலிருந்து, மற்றொரு தீவிற்கு படகில் போய்க்கொண்டிருந்த மக்கள் இன்று அதற்கு நடந்தே போகிறார்கள். காரணம் இரண்டிற்கும் இடையே நிலம் தோன்றி தீவுகளை ஒன்றிணைத்துவிட்டது. இப்படியாக பல தீவுகள் ஒன்றிணையத் தொடங்கியிருக்கின்றன. இதே போன்ற நிலைத் தொடர்ந்தால், இன்னும் 2500 ஆண்டுகளுக்குள் கடலுக்கு நடுவே பெரிய இயற்கைப் பாலமாக அந்தத் தீவுகள் உருவாகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

பின்லாந்து தீவுகளைப் பிரசவிக்கும் கடல்

இந்தத் தீவுக் கூட்டங்களில் மொத்தமே 2500 பேர் தான் வசிக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கென தனித்துவமான ஒரு வாழ்க்கை முறை கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வகை இடத்திற்கும் ஒவ்வொரு வகையான படகுகளை இந்தத் தீவுவாசிகள் உபயோகிக்கிறார்கள். ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகளுக்கு ஒன்று, கடல் நாய் வேட்டைக்குப் போகும் போது ஒரு வகையான படகு, ஸ்வீடன் நாட்டிற்குப் போக ஒரு தனி வகையான படகு , மீன்களைப் பிடிக்க ஒரு வகையான படகு என நான்கு வகையான படகுகளை வைத்திருக்கிரார்கள். இந்தத் தீவுகளில் கோடை காலங்களில் நள்ளிரவு வரைக் கூட சூர்ய அஸ்தமனம் ஆகாமல் இருக்கும். எப்படியாக இருந்தாலும், இந்தக் கடலையும், தீவுகளையும் அவ்வளவு நேசிக்கிறார்கள் அந்த மக்கள். உலகமே இங்கு நடப்பதை அறிவியல் ஆச்சர்யமாகப் பார்த்தாலும் கூட அந்த மக்கள் இந்த நிகழ்வை,

" கடல் நிலங்களைப் பிரசவிக்கிறது" என்று அன்பான வார்த்தைகளை உதிர்க்கிறார்கள். 

 - இரா. கலைச் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்