வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (22/04/2017)

கடைசி தொடர்பு:14:27 (22/04/2017)

பெண் பயணியை தாக்கிய விமான ஊழியர்! அதிரடி காட்டியது நிறுவனம்

விமானங்களில் பயணிகளை ஊழியர்களே தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் கைக்குழந்தையுடன் உள்ள பெண் பயணி ஒருவரை அந்த விமானத்தின் ஊழியர் தாக்கிய வீடியோ காட்சி ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

american airlines passenger hit

ஏர்லைன்ஸ் விமானத்தில் குழந்தையுடன் இருக்கும் பெண் ஒருவர் தனது குழந்தையின் ‘பேபி ஸ்ட்ரோலை’ பாதுகாக்க முயலும்போது விமான ஊழியரால் தாக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு ஆதரவாக பேசிவந்த மற்றொரு பயணியையும் தாக்கிவிடுவது போல் மிரட்டியுள்ளார் அந்த ஊழியர்.

இதனிடையே, அந்த விமானத்தில் பயணம் செய்த சுரைன் ஆத்யநாத்யா என்ற பயணி வீடியோ எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.  அதில், அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் இருந்து டாலஸ் நகரம் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ்  விமானத்தில் பெண் பயணியும் அவருக்கு ஆதரவாக பேசியதற்காக மற்றொரு பயணியும் எவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அந்த விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே அந்த வீடியோ வைரல் ஆகி கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், தங்கள் ஊழியரின் செயலுக்கு அமெரிக்கன் ஏர்லைனஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. நிகழ்வினை கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட பெண் பயணியும் அவரது குழந்தையும் பாதுகாப்பாக தரையிறங்க  முறையான ஸ்பெஷல் கவனம் அளித்தோம் என்றும் தெரிவித்துள்ளது. மோசமான முறையில் நடந்துகொண்டதால் விமான ஊழியரை நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

american airlines

சில நாள்களுக்கு முன்னர் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளானார். இந்நிலையில் மற்றுமொரு விமானத்தில் பயணிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். விமான நிறுவனங்களின் சேவைகள் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.