Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் சுத்தமான இந்த நாட்டில் தூசு இல்லை; சுங்கவரி இல்லை!!

காலையில் வீட்டிலிருந்து வெளியே போகும்போது தமன்னா கலரில் ஃப்ரெஷ்ஷாகக் கிளம்பினால், திரும்ப வீட்டுக்கு வரும்போது ‘ஃப்ரெண்ட்ஸ்’ பட வடிவேலு மாதிரி மூஞ்சியெல்லாம் கரி பூசி கறுகறுவெனத்தான் திரும்ப முடியும். இது நம் ஊர் ஸ்பெஷல். 20:20 மேட்ச்சில் கெயில்கூட சொதப்பலாம்; ஆனால், வெயில் பின்னியெடுத்து விடும். வெயிலை விட்டுத் தள்ளுங்கள். அதைத் தாண்டி முக்கியக் காரணம், ‘சுந்தரா டிராவல்ஸ்’ பஸ்கள் மாதிரி வாகனங்களில் இருந்து வரும் கரும்புகை, சுற்றுச்சூழலை ஒரு வழி பண்ணிவிடுகிறது. அதற்குத்தான் BS3 தடை, BS4 வாகனங்களுக்கு என்ட்ரி என்று என்னென்னவோ பண்ணிப் பார்க்கிறது அரசு.

நார்வே நாடு

பெங்களூரில் ‘ஆட்-ஈவன் டிரைவிங் சிஸ்டம்’ என்று ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாகனம் பயன்படுத்தும் முறையைக் கொண்டு வந்தார்கள். டெல்லியில் ஒரு படி மேலே போய், 2,000 சிசி-க்கு மேற்பட்ட கார்களுக்குத் தடையெல்லாம் விதித்து விட்டார்கள். என்ன செய்தாலும் சுற்றுச்சூழல் பல்லிளித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நார்வேயில் சத்தமில்லாமல் சுற்றுச்சூழல் மாசுவுக்கு செக் வைத்து விட்டார்கள். இப்போது உலகில் தூசி, புகை, இல்லாத நாடு, நார்வே!

அப்படியென்றால், கார்களே ஓடாதா என்றால், ‘ஆம்’ என்றும் சொல்லலாம். ஆம்! நார்வேயில் பெட்ரோல்/டீசல் கார்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார்கள்தான். விளைவு - இப்போது உலகின் ‘எக்கோ நாடு’ நார்வேதான். அதாவது, காற்றை மாசுபடுத்தாத சுத்தமான நாடு. நம் ஊரில் ‘எக்கோ டூரிஸம்’ என்று வாகனங்கள் ஓடாத ஒன்றிரண்டு டூரிஸ்ட் ஸ்பாட்கள் இருக்கும். ஆனால், முழுக்க முழுக்க நார்வே எக்கோ நாடு ஆனது எப்படி?

இத்தனைக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்த அறிவிப்பை வெளியிட்டது நார்வே அரசாங்கம். ‘‘இனிமேல் பெட்ரோல்/டீசல் கொண்ட கார்கள் நார்வேயில் ஓடாது’’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியது. குட்டி நாடான நார்வேயில் மக்கள் தொகை ரொம்பவும் கம்மிதான். ஆனால், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் இங்கு ஓடுகின்றனவாம்.

 

Norway

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்ப்பதற்குக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் எலெக்ட்ரிக் கார்கள். முழுக்க முழுக்க பேட்டரியில் ஓடுவதால், இதில் எக்ஸாஸ்ட் - அதாவது சைலன்ஸரே இருக்காது. இதில் இருக்கும் ஒரே பிரச்னை - இதை சார்ஜ் ஏற்றுவதுதான். 8 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால், அதிகபட்சம் 120 கி.மீ வரை பயணிக்கலாம் என்பதுதான் இதில் மைனஸ். ஆரம்பத்தில் இந்த அறிவிப்பை நார்வே போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டபோது, ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின. ‘‘டீசல்/பெட்ரோல் விற்பனை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நார்வே இனி பொருளாதாரத்தில் அவ்வளவுதான்!’’ என்று வியாபார காந்தங்கள் பொங்க ஆரம்பித்தார்கள். ஆனால், இப்போது உலகிலேயே எலெக்ட்ரிக் கார்களை அதிகமாக விற்பனை செய்யும் நாடு - நார்வேதான். 

அதற்காக அரசாங்கம் அளித்த சலுகைகள் கொஞ்சநஞ்சமல்ல. முதலில் கார் வாங்கும்போது பர்ச்சேஸ் வரி, பல் விளக்க வரி என்று பரவலாக இருந்த எல்லா வரிகளையும் காலி செய்தது அரசு. அதாவது, அந்த ஊரின் எக்ஸ்ஷோரூம் விலைக்கே கார் வாங்கலாம். (நம் ஊரில் எக்ஸ் ஷோரூம் விலை 5 லட்சம் என்றால், ஆன்ரோடு விலை 6.5 லட்சம் வரும்!) அப்புறம், சார்ஜிங் பிரச்னையைத் தவிர்ப்பதற்காக, நாடு முழுவதும் 5,000-த்துக்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஏற்படுத்தினார்கள். சார்ஜ் பண்ணுவதற்குக் கட்டணமே கிடையாது. அதற்குப் பிறகு நார்வேயில் டோல்கேட் கட்டணத்தையும் இலவசமாக்கினார்கள். அதேபோல், நம் ஊரைப்போல் கக்கத்தில் கைப்பையைச் சொருகிக்கொண்டு பார்க்கிங் வசூலிக்கும் சிஸ்டத்துக்கும் அடுத்து பெப்பே காட்டினார்கள். அப்புறமென்ன, ‘சர் சர்’ என 60 கி.மீ வேகத்தில் நார்வே லேன்களில் புகுந்து புறப்பட ஆரம்பித்து விட்டன எலெக்ட்ரிக் கார்கள். நிஸான், டெஸ்லா, செவர்லே, ஃபோக்ஸ்வாகன் போன்ற நிறுவனங்களின் கார்கள்தான் நார்வேயில் லீடிங். இப்போது இங்கே கார்பன் எமிஷன்களின் அளவு, 5%-க்கும் கீழாகக் குறைந்திருக்கிறதாம். காரணம், Plug and Drive சிஸ்டம். பஸ்களுக்கும் இந்த சிஸ்டம் வரவிருக்கிறது. 

 

Norway

 

‘‘2020-க்குள் 0% கார்பன் எமிஷன் நாடாக நார்வே இருக்கும். எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டில் மட்டுமல்ல; இன்னும் இரண்டு வருடங்களில் 4 லட்சம் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓடும். இதற்கு ஒத்துழைத்த நார்வே அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிக்க நன்றி!’’ என்று அண்மையில் நடந்த விழாவில் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்திருக்கிறார், எலெக்ட்ரிக் கார் விற்பனை அசோஸியேஷன் தலைவர் ‘கிரிஸ்டினா பு’ என்பவர்.

இதைப் பார்த்துவிட்டோ என்னவோ, அமெரிக்காவில் எலெக்ட்ரிக் கார்களுக்கென 10,000 இலவச எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவப் போகிறார்களாம். 

நம் ஊரில் ஓபிஎஸ், யுபிஎஸ் பிரச்னை முதலில் சுமுகமாக முடியட்டும்! அட்லீஸ்ட், Drunk and Drive சிஸ்டத்தையாவது முழுமையாக ஒழிக்கலாம்; அப்புறம் Plug and Drive சிஸ்டத்துக்கு வரலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement