Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழிலாளர்கள் புரட்சியில் கார்ல் மார்க்ஸ்! - மே தின பகிர்வு

உழைப்பாளர் சிலை

விடை கொடுக்காத தேசத்தில் வீறுகொண்டு எழுந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்கிறபோது அதற்கான வழியைக் கையில் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், அதன் விதை அழுகலானதாக இருக்கக்கூடாது; ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும்; சரித்திரமாகும். அன்று நடந்த தொழிலாளர் புரட்சியில் இதுபோன்ற விதை மிகவும் வலிமையானதாக இருந்ததால்தான் இன்று தொழிலாளர்களுடைய வாழ்க்கை, தூணாய் உயர்ந்துநிற்கிறது. தொழிலாளி இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்கிற சூழலில், அவர்கள் இன்று ஓரளவுக்குத் தங்களுடைய உரிமைகளுடன் வாழ்கிறபோதிலும், ஒருகாலத்தில் அவர்களுடைய உழைப்பு உறிஞ்சப்பட்டது; ஊதியம் குறைக்கப்பட்டது;  உடல் காயம்பட்டது. அதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் அவர்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். அதில், எத்தனையோ இழப்புகள்... சம்பவங்கள் நடந்தேறின. அதன் பயனால்தான் இன்று உலகெங்கிலும் தொழிலாளர் தினம் (மே - 1) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தொழிலாளர்களின் தொடர் புரட்சி!

தொழிலாளியின் நிலையை நன்றாகப் புரிந்துகொண்டதால்தான் பேரறிஞர் அண்ணா, ''தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங்காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்'' என்றார். 

18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் நிச்சயமற்ற வேலை, மிகக்குறைந்த சம்பளம்,  நீண்டநேர வேலை என தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகக் கிடந்தனர்;  பசி, பட்டினியுடன் மாடாய் உழைத்துக் கொத்துகொத்தாய் மாண்டனர்; பாரபட்சமின்றி அவர்களை எந்நேரமும் முதலாளித்துவத்தினர் கொடுமைப்படுத்தினர்; ஒருநாளைக்கு 12 முதல் 18 மணி நேரம்வரை வேலை செய்யத் தொழிலாளர்கள்  கட்டாயப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாகத் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தனர்; முதலாளி வர்க்கத்துக்கு எதிராகக் கொடிபிடித்தனர்; அவர்களுடைய கொடுமைகளிலிருந்து விடுவிக்கப் புரட்சி செய்தனர். இதற்காகப் பல்வேறு நாடுகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கின. தொழிலாளர்களின் தொடர் புரட்சியும், தொய்வில்லாத உத்வேகமும் முதலாளித்துவத்தை முட்டிச் சாய்த்தது. முரண்டுபிடித்த அரசுகளை மண்டியிடச் செய்தது; முழு உரிமையையும் வழங்க வகை செய்தது. 

தொழிலாளர்கள்

'முதலாம் அகிலம்' !

இப்படி, அன்றைய காலத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பல நாடுகள் புரட்சி செய்ததன் விளைவாக இன்று தொழிலாளர் நலனில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு விடியலாகவும், விடிவெள்ளியாகவும் நின்ற மாபெரும் தலைவர்களில் மாமேதை கார்ல் மார்க்ஸும் ஒருவர். குறிப்பாக அவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு அதில் வெற்றிபெற்றவர்  கார்ல் மார்க்ஸ். அவர், அகிலம் முழுவதும் தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் உருவாகக் காரணமாய் இருந்தார். அது தவிர, உலகத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்ததுடன், தலைசிறந்த புரட்சியாளராகவும் தொழிலாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். ''எட்டு மணி நேர போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் முதலாளித்துவமே எல்லாப் பிரச்னைகளுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது'' என்றார். அதை உடைப்பதற்கான ஒரு கருவியாக 1864-ல் 'முதலாம் அகிலம்' என்ற ஒரு தொழிற்சங்கக் கூட்டமைப்பை நிறுவினார். இதன் மேம்பட்ட வடிவத்தை முன்மொழிந்த  அவரது நண்பர் ஏங்கல்ஸ், ''உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்'' என்ற உயிரோட்டமுள்ள உன்னத வார்த்தையை அதன் அடிப்படைக் கோட்பாடாக முன்வைத்தார். கார்ல் மார்க்ஸின் முதலாம் அகிலமும் , ஏங்கெல்ஸின் உன்னத வாசகமும் உலகத் தொழிலாளர்களின் வெற்றிக்கு விடை காணச் செய்தது. அது, உலகத்தொழிலாளர்கள் அனைவரையும் இன்றுவரை ஈர்த்துக்கொண்டிருப்பதுடன், இணைந்து போராடவும் வைத்துக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸின் எட்டுமணி நேர இயக்கம்! 

தேசிய தொழிற்சங்கத்தின் எட்டுமணி நேர இயக்கம் குறித்து கார்ல் மார்க்ஸ் தன்னுடைய 'மூலதனம்' நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார். ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்தவிதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும்வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக்கொள்ள முடியாது. ஆனால், அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஓர் இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது'' என்று குறிப்பிடுகிறார்.

''எது அடிமைத்தனம்?''

‘'இது, வர்க்கத் தனி உரிமைகளுக்கும் ஏகபோகங்களுக்கும் நடைபெறும் போராட்டம் அல்ல... சமத்துவமான உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் எல்லா வகையான வர்க்க ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் நடைபெறுகிற போராட்டம்தான் தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டம்'' என்பது அவருடைய ஆணித்தரமான வாதமாக இருந்தது. ‘'உழைப்புச் சாதனங்களை... அதாவது, வாழ்க்கையின் ஆதாரங்களை ஏகபோகமாக வைத்திருப்பவரிடம் உழைக்கும் மனிதன் பொருளாதார ரீதியில் கீழ்ப்பட்டிருப்பதே அடிமைத்தனம்'' என்று சொல்லும் மார்க்ஸ், ஒரு தொழிலாளி முதலில் எப்படி ஒடுக்கப்படுகிறான் என்பதை அவன் புரிந்துகொண்டால்தான், தன்னுடைய நிலையை முழுவதுமாக உணரமுடியும் என்கிறார். சர்வதேசத் தொழிலாளர் சங்கத்துக்குச் சில விதிமுறைகளை அவர் உருவாக்கினார். அதில், மிகவும் குறிப்பிடவேண்டிய ஒன்று, ''தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்களுடைய லட்சியம் ஒன்றாக இருக்கவேண்டும். தொழிலாளி வர்க்கங்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் பரிபூரண விடுதலை'' என்பதே அது.

கார்ல் மார்க்ஸ்

''தொழிலாளர்களிடம் ஒற்றுமை இல்லை!''

''தொழிலாளி வர்க்கத்தினரின் விடுதலையை அவர்களே வென்றெடுத்துக்கொள்ள வேண்டும்'' என்ற மார்க்ஸின் கருத்து நியாயமானது. ஏனெனில், தொழிலாளியின் பிரச்னை தொழிலாளிக்குத்தான் தெரியும். இதையேதான் அவர்,  ''தொழிலாளிகளுடைய பிரச்னை என்பது குறிப்பிட்ட ஓர் எல்லையின் பிரச்னை அல்ல. அது, உலகம் சார்ந்த சமூகப் பிரச்னை. ஆகவே, அதனை... ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் பிரிவு, மற்ற நாடுகளில் உள்ள அந்தப் பிரிவினருடன் இணைந்து செயல்படவேண்டும். அப்படித் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஒரு வலிமைமிகுந்த சகோதரப் பிணைப்பு இருந்தால் மட்டும்தான் அடிமைத்தனத்துக்கு எதிராகப் போரிடுவது சாத்தியமாகும்'' என்றார். இது, அவருடைய தீர்க்கமான, திடமானச் சிந்தனையைக் காட்டுகிறது. அதேநேரத்தில், ''தொழிலாளர்கள் இவ்வாறு ஒன்றுபடுவது இதுவரை சாத்தியமாகாமல் இருப்பதற்குக் காரணம்... அவர்களும், அவர்களிடம் ஒற்றுமை இல்லாததும்தான்'' என்று அவர் சொல்வதையும் நாம் கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

செவிடன் காதில் ஊதிய சங்கு!

காலங்கள் பல உருண்டோடிவிட்டன; காவியங்கள் பல உருவாகிவிட்டன; சட்டங்களும் திட்டங்களும் பல உருவாக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், தொழிலாளர்களின் கண்ணீருக்கு மட்டும் இன்றுவரை விடை கிடைக்கவில்லை. அவர்களுடைய விடுதலை என்பதும் பல விஷயங்களில் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, 'உழைப்பாளியின் கூலியை அவன் வியர்வை உலர்வதற்குமுன் கொடுத்துவிடுங்கள்' என்ற வாசகம், இன்று பல இடங்களில் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. அவர்களுடைய வியர்வைக்கு ஏற்ற ஊதியம்  நியாயமாகவும், நேர்மையாகவும் வழங்கப்படவில்லை என்பதே இன்றைய தொழிலாளர்களின் நிலையாக இருக்கிறது. இதற்காக அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகவும், பிற இடங்களிலும் போராடி வந்தாலும்,  அவர்களுடைய பிரச்னைகள் என்னவோ செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement