Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பொங்கல், தீபாவளி போல மே தினத்திற்கு புத்தாடை உடுத்துவார்கள்!' பாலபாரதி #MayDay

மே தினம்

தொழிலாளர்களின் உரிமைகளைப் போராடிப் பெற்றதன் பெருமிதத்தில் கொண்டாடப்படுவது மே தினம். எந்த வகையான தொழிலாளியாக இருந்தாலும் அவர்களுக்கு அடிப்படையான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே இந்நாளின் மையம். மே தினத்தை இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் உலகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யைச் சேர்ந்த, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான பாலபாரதியிடம் மே தின விழாக் குறித்த அனுபவங்களைக் கேட்டோம்.

"1986-87 ஆம் ஆண்டுகளில் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இருந்தபோதுதான் முதன்முதலாக மே தின விழாவில் கலந்துகொண்டேன். நாங்கள் இருந்த திண்டுக்கல், பாரதிபுரம் பகுதியில் நெசவாளர்கள் அதிகம். அனைத்துத் தெருக்களிலும் செங்கொடி ஏற்றப்படும். தோழர்களுக்கு மதிய உணவு தயார் செய்திருப்பார்கள். சில தோழர்கள் புதிய உடை உடுத்தியிருப்பார்கள். அதாவது பொங்கல், தீபாவளி போல இதை ஒரு பெரும் மகிழ்ச்சிக்கு உரிய தினமாக நினைத்து கொண்டாடுவர். இதை முதன்முதலாக பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், மே தினம் அவர்களின் உணர்வின் பெரும் பகுதியாக கலந்துவிட்டதை பின்னாட்களில் புரிந்துகொண்டேன்.

எங்கள் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஆட்டுத் தோல், மாட்டுத் தோல் ஆகியவற்றிலிருந்து முடிகளை தனியே எடுப்பார்கள். கைகளில் அணிந்துகொள்ள, இப்போதுதான் கிளவுஸ் தருகிறார்கள். அப்போதெல்லாம் எதுவும் கிடையாது. பாலபாரதிவெறும் கைகளால்தான் முடிகளை அகற்ற வேண்டும். நாங்கள் அங்கு செல்லும்போது, அங்கு வீசிய நாற்றத்தால் மூக்கைப் பொத்திக்கொண்டேன். என்னோடு வந்திருந்த தோழர்கள் 'மூக்கைப் பொத்திக்கொண்டு நின்றால், தொழிலாளர்களோடு அந்நியப்பட்டு போவோம்' எனக் கூறுவர். சில நாட்களில் எனக்கும் அந்த நாற்றம் பழகிவிட்டது. அங்கு அதிக அளவில் பெண்கள் வேலைபார்ப்பார்கள். தோழர் மைதிலி சிவராமன் திண்டுக்கல் வரும்போதெல்லாம், அந்தத் தொழிலாளர்களைச் சந்தித்து, நீண்ட நேரம் உரையாடிச் செல்வதை ஒருபோதும் மறக்க மாட்டார்.

இப்போது, அனைத்து இடங்களிலும் பெண்கள் வேலை பார்ப்பதைப் பார்க்க முடிகிறது. திருச்சி, பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பெண்கள் சப்ளையராக இருந்தார்கள். அதனால், சாப்பிட வரும் பெண்கள் எவ்வித சங்கோஜமுமின்றி இயல்பாக உணவருந்தியதைப் பார்த்தேன். இவர்கள் மட்டுமல்ல, பூ விற்பது தொடங்கி பியூட்டி பார்லர் வரை பல வகையான வேலைகளில் பெண்கள் ஈடுபடுகின்றனர். இந்த நவீன தாராளமயக் கொள்கையால், உத்திரவாதமற்ற ஏராளமான வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை உருவாக்கி விட்டது. கல்யாணத்தில் நம்மை வரவேற்கும் பெண்கள்கூட, பணியாளர்களாக இருக்கிறார்கள். கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதி நேர வேலையாக இதைச் செய்கிறார்கள்.  இவை போன்ற உதிரி தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை.

எந்தப் பொருளும் ஒரே விலையில் இருப்பதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் உதிரி தொழிலாளிகளின் ஊதியம் அந்தளவுக்கு ஏறுவதில்லை. அரசு அறிவித்திருக்கும் பொது விடுமுறைகளை, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் அளிப்பதில்லை. பெண்கள் எனும்பட்சத்தில் கூடுதலாக பாலியல் சுரண்டலும் நடக்கிறது. இவற்றிலிருந்து மீள வேண்டும் எனும் எண்ணம் பெண்களுக்கு முதலில் வர வேண்டும். அதற்கு தொழிலாளர்களான அடிப்படை உரிமைகள் பற்றிய தெரிந்துகொள்ள வேண்டும். அதுவே முதல்படி.

மே தினம் என்பதே தொழிலாளர்களுக்கான உரிமைகளை உரக்கக்கூறுவதற்கும், உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் போராடவும் உத்வேகம் அளிக்கும் நாள் தான். நாள்தோறும் பெண்களின் உழைப்பு சுரண்டப்படும் இந்தச் சூழலில் மே தின விழாக்களில் அவர்கள் கலந்துகொள்வதும், மே தினம் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம்." என்றார் பாலபாரதி.

உழைக்கும் மக்களின் உரிமைகளும் உணர்வுகளும் காப்பாற்றப்பட வேண்டியது இன்றியமையாதவை என்பது எவராலும் மறுக்க முடியாது. மே தின விடுமுறை தினத்தில் தொழிலாளர் உரிமைகளைப் போராடியவர்களை நினைவுக்கூர வேண்டியது அவசியம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement