Tinder-க்கு வந்த காண்டாமிருகம்... காரணம் என்ன? | Last male northern white rhino Sudan joined in Tinder

வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (02/05/2017)

கடைசி தொடர்பு:09:17 (02/05/2017)

Tinder-க்கு வந்த காண்டாமிருகம்... காரணம் என்ன?

பிரபல டேட்டிங் ஆப் ஆன டிண்டர் பற்றி அறியாத இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவு இளைஞர்களிடம் பிரபலமான ஆப் இந்த டிண்டர். ஆப்-ஐத் திறந்தவுடன் சிங்கிள் ஸ்வைப் செய்தாலே போதும்; உங்களுடன் 'மேட்ச்' ஆகும் நபர்களுடன் நீங்கள் உரையாடலாம். இப்படி யூத் ஃபுல்லான ஆப்பில் தற்போது புதிதாக ஒரு வி.ஐ.பி இணைந்துள்ளார். ஆப்பிரிக்க வடக்கு வெள்ளைக் காண்டாமிருகம்தான் அந்த வி.ஐ.பி. அவர் பெயர் சூடான். பிற காண்டாமிருகங்கள் போல அல்லாமல் சூடான் ரொம்பவும் ஸ்பெஷல். ஏன் தெரியுமா?

உலகின் அரிய வெள்ளை காண்டாமிருகம் சூடான்

யார் இந்த சூடான்?

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகத்தில் இருக்கும் வெள்ளைக் காண்டாமிருகம்தான் இந்த சூடான். உலகில் கடைசியாக எஞ்சியிருக்கும் ஒரே ஒரு ஆண் வெள்ளைக் காண்டாமிருகமும் இந்த சூடான்தான். இதன் இனம் மொத்தமும் கொம்புகளுக்காக கொடூர வேட்டைக்காரர்களிடம் பலியாக, தனது இனத்தைக் காப்பாற்றுவதற்காக அழிவின் விளிம்பில் நின்று போராடி வருகிறது இந்த சூடான். இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதால், இந்தக் காண்டாமிருகத்தைக் காப்பாற்ற ராணுவ பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்நேரமும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் மத்தியில்தான் வாழ்ந்து வருகிறது இந்த சூடான். தற்போது டிண்டரில் இணைந்திருப்பது கூட, இதற்காகத்தான்.

43 வயதாகும் சூடான் தனது இறுதிக் காலங்களில் இருக்கிறது. சூடான் இனப்பெருக்கம் செய்தால் மட்டுமே அழிவின் விளிம்பில் இருக்கும் ஆப்பிரிக்க வடக்கு வெள்ளைக்காண்டாமிருகங்கள் தப்பும். இல்லையெனில் சூடானோடு இந்த இனம் அழிந்துவிடும். இதற்காக தற்போது இதன் இனத்தில் இருக்கும் இரண்டு பெண் காண்டாமிருகங்களோடு இணை சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதில் வெற்றி கிட்டவில்லை. எனவே மருத்துவர்களிடம் தற்போது இருக்கும் ஒரே தீர்வு IVF எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறைதான். ஆனால் இந்த முறை இதற்கு முன்பு எந்தக் காண்டாமிருகங்களுக்கும் செய்யப்பட்டது கிடையாது. எனவே காண்டாமிருகங்களுக்கு எனப் பிரத்யேகமான IVF முறையினை உருவாக்க நிதி திரட்டி வருகின்றனர் உயிரியல் பூங்காவினர். அதற்கான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதற்காகத்தான் டிண்டர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது பூங்கா நிர்வாகம்.

"செயற்கை கருத்தரிக்கும் முறையை இதுவரை காண்டாமிருகங்களுக்கு செய்தது கிடையாது. இதுதான் முதல்முறை. எங்களால் இயன்றவரை சூடானைக் காப்போம். ஆனால் காலத்திற்கு எதிராகத்தான் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது" என்கிறார் ஒல் பெஜட்டா பூங்காவின் தலைவர் ரிச்சர்ட் விக்னே. டிண்டர் ஆப் மூலமாக சூடானைப் பற்றி 190 நாடுகளில், 40 மொழிகளில் மக்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சூடானைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் தெரியுமா? ‘The Most Eligible Bachelor in the World’. மேலும் டிண்டரில் சூடான் பற்றிய புரொஃபைல் இதுதான். 

காண்டாமிருகத்தின் டிண்டர் புரொபைல்

தங்கத்தை விடவும் விலைமதிப்பு மிக்கவை காண்டாமிருகங்களின் கொம்புகள். அவற்றுக்காக சூடானின் இனம் தன்னையே பலிகொடுத்துவிட்டது. மனிதனின் பேராசைக்கு பலியான இனங்களில் ஒன்றாக, தவறுகளில் ஒன்றாக வரலாற்றில் இதுவும் பதிவாகும். ஆனால் விலங்குகளாக, பறவைகளாக, நீர்நிலைகளாக மனிதனின் தவறுகளும், பேராசையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்...இருக்கிறது. அஃறினை என மிருகங்களுக்குப் பெயர் மட்டும் வைத்துவிட்டு அவற்றின் குணங்களை நாம் ஏந்தி நிற்கிறோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்