வடகொரியாவை சுற்றிவளைக்கும் உலகநாடுகளின் போர்க்கப்பல்கள்! | Tension Rise : warships were sent to Korean Peninsula

வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (02/05/2017)

கடைசி தொடர்பு:09:15 (04/05/2017)

வடகொரியாவை சுற்றிவளைக்கும் உலகநாடுகளின் போர்க்கப்பல்கள்!

போர்க்கப்பல்கள்

மெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான பிரச்னை நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிரான கருத்து, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணுஆயுத சோதனைகளை நடத்துவது என வடகொரியா அமெரிக்காவை ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவும் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் போன்றவற்றை தினமும் கொரிய தீபகற்பத்துக்கு அருகே அனுப்பி, எச்சரிக்கை செய்து வருகிறது. இருப்பினும் 'வடகொரியாவுக்கு எதிராக, அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கைகள் ஏதேனும் எடுத்தால், ஒரு முழுமையான போரை அமெரிக்கா சந்திக்க வேண்டி இருக்கும்' என வடகொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இந்த பிரச்சனை முற்றி வருவதோடு உலக நாடுகள் பல அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்ப்படத் தொடங்கியுள்ளன. ஜப்பான் தனது நாட்டின் பாரம்பரியமான மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பலான 'இஸூமோ' போர்க்கப்பலை அமெரிக்காவுக்கு ஆதரவாக கொரிய தீப கற்பத்துக்கு அனுப்பியுள்ளது. இது போர் தொடுப்பதற்க்கான அணி சேருதல் என்று உலக நாடுகள் சொல்லி வருகின்றன.

'அணுஆயுத சோதனையை நிறுத்த முடியாது' என்று வடகொரியா திட்டவட்டமாக மறுத்து விட்டதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் 'கார்ல் வின்சன்' என்ற மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலும் கொரிய கடல்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 'அமெரிக்கக் கப்பல்களை நாங்கள் சிதறடித்துவிடுவோம்' என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பானின் 'இஸூமோ' போர்க்கப்பல் அனுப்பப்பட்டு அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு ஆதரவாகவும்,  எரிபொருள் அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.  'இஸூமோ' போர்க்கப்பலின் மொத்த நீளம் 249 மீட்டர். இக்கப்பலில் 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்க முடியும்.  மேலும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த போர்க்கப்பலில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜப்பான் மேற்கொள்ளும் முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகும்.

ட்ரம்ப்

தவிர, நீரிலும், நிலத்திலும் சென்று தாக்கக்கூடிய ஃபிரான்ஸ் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றும், ஜப்பான்-பிரிட்டன் கடற்படை கூட்டு போர் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் போர்மூளும் சூழல் ஆரம்பித்த சில தினங்களிலேயே அமெரிக்கா மற்றும் தென்கொரியப் படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. போர் தொடங்கும்பட்சத்தில், மேலும் பல நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நடவடிக்கைகள் எல்லாம் மூன்றாம் உலகப்போர் உருவாவதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என்று உலக நாடுகள் இப்போதே அச்சத்தில் இருக்கின்றன.

கிம்-ஜோங் உன்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், "வடகொரிய அதிபர் கிம்-ஜோங் உன்-வுடன் பேச்சுவார்த்தை நடத்தத்தயார். அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தால், அதை சந்தோஷமாக வரவேற்கிறேன்" என்று அறிவித்தார். இதுதொடர்பாக வாஷிங்டனில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "கிம்-ஜோங் உன்-ஐ சந்திப்பதை நான் மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். அவர் ஒரு புத்திசாலி" என்று கூறியுள்ளார். ட்ரம்ப் இப்படிக் கூறியிருப்பது, போர் ஏற்படாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கான இறுதி அழைப்பாகக் கூட இருக்கலாம் என்று பல நாடுகளும் கருதுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்தால்தான் போர் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதுடன், உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும். இல்லையென்றால், மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. போர்தான் தீர்வென்றால் அனைத்து நாடுகளுக்கும் அன்று ஐன்ஸ்டீன் விடுத்த எச்சரிக்கையே சரியான பதிலாக இருக்கும்.

விமானம் தாங்கி கப்பல்

 

 

"மூன்றாம் உலகப்போர் எதைக்கொண்டு போரிடுவார்கள் என்பது எனக்குத்தெரியாது. ஆனால் நான்காம் உலகப்போரானது வெறும் குச்சிகளும், கற்களும் கொண்டுதான் நடைபெறும்."


டிரெண்டிங் @ விகடன்