ஸ்பீல்பெர்க் சொன்ன டைனோசர் கதை தவறா? ஆச்சர்யமூட்டும் ஆராய்ச்சி

இன்னிக்கு உண்மையா இருக்குறது, நாளைக்குப் பொய்யாகலாம். இன்னிக்குப் பொய்யா இருக்குறது நாளை மறுநாள் உண்மையாகலாம். அதாவது, பொய் உண்மையாகலாம், அதே மாதிரி உண்மை பொய்யாகலாம். சமயங்கள்ல பொய்.. பொய்யான உண்மையா இருக்கலாம். உண்மை... உண்மையான பொய்யா இருக்கலாம். சரி... சரி... கடுப்பாகாதீங்க. இது பெரிய தத்துவமில்ல... ஆனா, யதார்த்தமான உண்மை. அதுவும் அறிவியல் உலகத்துல இதெல்லாம் சாதாரண விஷயம். இப்ப இந்த விஷயம் என்னன்னா... இதுவரைக்கும் டைனோசர்கள் பத்தி நாம நம்பின பல விஷயங்கள் பொய்ன்னு சொல்றாங்க சிலர். இல்லை... இல்லை... இதுவரை வந்ததெல்லாம் உண்மை தான். உண்மை மட்டும் தான் அடித்துச் சொல்றாங்க இன்னொரு தரப்பினர். அப்ப நாம பார்த்த ஜுராசிக் பார்க் படம்???... ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொன்ன விஷயங்கள் பொய்யா???... " ஐயகோ!!! என்னை இப்படி மோசம் செய்துவிட்டீர்களே கோப்ப்பால் " என்று பதறாமல்... இதைப் படிங்க...

டைனோசர் ஆராய்ச்சியில் புதிய திருப்பம்

அதாகப்பட்டது... 1887ல் ஹாரி சீலி ( Harry Seeley ) என்றொரு ஆராய்ச்சியாளர் இருந்தார். மனுசனுக்கு பழைய விஷயங்கள ஆராய்ச்சி பண்றதுல அலாதி ஆர்வம். ஏதோ சில எலும்புகள வச்சு தொடங்குன ஆராய்ச்சி... உலக வரலாற்றையே மாற்றுமளவுக்கு கொண்டு போனது. ஒரு காலத்துல உலகின் மிக முக்கிய உயிரினமாக இருந்த டைனோசர்கள் குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து சில அடிப்படை விஷயங்களை இந்த உலகிற்கு விளக்கினார். 

அடிப்படையில் டைனோசர்கள் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அதில் ஒன்று " ஆர்னிதிஷியன்ஸ்" ( Ornithischians ) . அதாவது, "பறவை டைனோசர்கள் " .  இந்த இனம் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், " பறக்கும் ராசாளியே..." என்பதற்கு பதிலாக " பறக்கும் டைனோசரே..." என்றே கூட எழுதியிருக்கலாம். அந்தளவிற்கு பறவைகளை ஒட்டி அதனோட இயல்புகள் இருந்ததாக சொல்லப்படுது. டக்பில்ஸ் ( Duck Bills ), ஸ்டெகோசரஸ் ( Stegosaurs ) போன்றவை இந்தப் பிரிவின் கீழ் வருபவை. அவை அத்தனையும் சைவ உணவுப் பழக்கம் கொண்ட  டைனோசர்கள். 

அடுத்ததாக " சொரிஷியன்ஸ்" ( Saurischians ). அதாவது " பல்லி டைனோசர்கள் ". ஊர்வன வகைகள். இதில் சைவமும் இருக்கின்றன. அசைவமும் இருக்கின்றன. இந்த இரண்டுப் பிரிவுகளையும், உலகம் முழுக்கவிருந்து கிடைத்த டைனோசர்களின் எலும்புகளை ஆராய்ந்தே பிறகே வகைப் பிரித்துள்ளார் சீலி. அதாவது, உலகம் முழுக்கவிருந்து கிடைத்த எலும்புகளில் ஒன்று பறவையைப் போன்ற இடுப்புப் பகுதிகள் இருந்தன, மற்றவற்றில் ஊர்வனைகள் போன்ற இடுப்பு எலும்புகள் இருந்தன. இதைக் கொண்டு தான் சீலி இந்த முடிவினை அறிவித்தார். 

ஸ்பீல்பெர்க் டைனோசர் கதை தவறா

அன்று முதலே, உலகம் முழுக்க இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டு இதன் அடிப்படையிலேயே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் " ஜுராசிக் பார்க்" படங்களில் கூட இதன் அடிப்படையில் தான் நீளமான கழுத்து கொண்ட சைவ டைனோசர், முரட்டுத்தனமான அசைவ டைனோசர் என்று பல விஷயங்கள் காட்டப்பட்டிருக்கும். ஆனால், இதெல்லாம் தப்புன்னு சொல்லி, புது டைனோசர் கோட்பாட்டை முன்வைக்கிறார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மேத்யூ பாரன். 

உலகம் முழுக்க இருந்து 70 டைனோசர் எலும்புகளைக் கொண்டு வந்து, அதனுடைய 457 உடல் அம்சங்களை ஆராய்ச்சி செய்து , அந்த முடிவுகளை ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமின் மூலம் ஒன்றிணைத்து, இறுதியாக ஒரு முடிவை வெளியிட்டிருக்கிறார். இது இதுவரை நம்பப்பட்டு வந்த  டைனோசர் குடும்ப அமைப்பில் இருந்து ( Dinosaur Family Tree ) பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, ஸ்காட்லாந்திலும், ஆப்ரிக்காவின் டான்சானியாவிலும் சமீபத்தில் சில டைனோசர் எலும்புகள் கிடைத்தன. அவை மேத்யூ பாரன் கூறிய கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. 

டைனோசர் ஆராய்ச்சி

இந்தப் புதிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு உலகின் பல ஆராய்ச்சியாளர்கள் ஆதரவளித்தாலும் சிலர் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். ரன்டால் எர்மிஸ் என்கிற ஆராய்ச்சியாளர், “ மேத்யூவின் இந்த முடிவுகள் தவறானவை . இதைக் கொண்டு நாவல் எழுதலாம், படம் எடுக்கலாம். ஆனால், இது உண்மையா என்றால்... சந்தேகம் தான்...” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், டைனோசரின் அடிப்படைகள் மாறியது என்றால், அதைத் தழுவி இயற்றப்பட்ட பல இயற்கை தத்துவங்களும், கோட்பாடுகளும் மாறும் அபாயம் உள்ளது. 

இப்போது கட்டுரையின் முதல் பத்தியைப் படியுங்கள். அந்தத் தத்துவம் உண்மை என்று புரிகிறதா? வரலாறு மிக முக்கியம் அமைச்சரே !!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!