வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (05/05/2017)

கடைசி தொடர்பு:09:07 (05/05/2017)

“கான்ஸ்டபிள் எலியட் ரிப்போர்டிங் சார்..!” - நியூசிலாந்தைக் கலக்கும் பன்றிக்குட்டி

பன்றிகள் ஏற்படுத்தும் சத்தத்தை நினைவில் கொள்ளுங்கள். இப்போது அதே நினைப்போடு இதைப் படியுங்கள்...

“பன்றிகளோட அதிகபட்ச வேகம் என்னன்னு தெரியுமா? ஒரு மணி நேரத்திற்கு, 9கிமீ. ஆனால், நான் அவ்ளோ வேகத்துல ஓடமாட்டேன். எனக்கு பத்திரமா போகணும். அதனால, மெதுவாகத் தான் போவேன். எப்பவுமே மெதுவாகப் போறது தான் பாதுகாப்பு. இதை நல்லா ஞாபகத்துல வச்சுக்கங்க. குழந்தைகளும் என்னை மாதிரி ரொம்ப குட்டியா தான் இருப்பாங்க. திடீர்னு ஓடுவாங்க, நிப்பாங்க, நடப்பாங்க. அவங்களுக்கு ஆபத்தெல்லாம் தெரியாது. அதனால, பள்ளிக்கூடம் பக்கம்லாம் போகும் போது, ரொம்ப கவனத்தோடு வண்டி ஓட்டுங்க..." -

இப்படிக்கு, கான்ஸ்டபிள் எலியட் .

நியூசிலாந்து காவல்துறையில் பன்றிக்குட்டி

இப்படி ஒரு ஃபேஸ்புக் போஸ்டுக்கு , சில மணி நேரங்களிலேயே பத்தாயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிகின்றன. "ஓகே மிஸ்டர் எலியட்...", "கண்டிப்பாக எலியட்...", " எலியட் வீ லவ் யூ... நீங்கள் சொல்வதை நிச்சயம் கேட்போம்", " எலியட் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..." என்று ஏக கமெண்டுகள் நிறைகின்றன. இந்தப் பதிவுடன் இருக்கும் போட்டோவில் சாலையோரத்தில், போலீஸ் யூனிஃபார்ம், தொப்பி சகிதமாக அட்டகாசமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கான்ஸ்டபிள் எலியட். கினியன் பன்றி. ( Guinea pig ) 
நியூசிலாந்த் காவல்துறையின் "மகேந்திர பாகுபலி" இந்த எலியட். அப்பா சொல்லி, அம்மா சொல்லி, அண்ணன் சொல்லி, தம்பி சொல்லி, நண்பன் சொல்லி, போலீஸ் சொல்லி கேட்காத நியூசிலாந்து சேட்டைக்காரர்கள் பலரும், எலியட்டின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்கள் . அதே போல், எலியட் சதாசர்வகாலமும் அறிவுரைகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருப்பதில்லை. பணி நேரம் முடிந்ததும், புல் மேய்வது, ஹாயாக படுத்துக் கொண்டிருப்பது போன்ற ஃபோட்டோக்களையும் ஷேர் செய்கிறது. நியூசிலாந்து பெண்கள் இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குளைக் குவித்து தள்ளுகிறார்கள். 

நியூசிலாந்து காவல்துறையில் பன்றிக்குட்டி - எலியட்

எலியட்டுக்கு இப்போது நான்கு வயதாகிறது. எலியட் இருக்கும் குடும்பத்தில் ஒருவர் நியூசிலாந்த்  காவல்துறையின் மீடியா பிரிவில் வேலைசெய்கிறார். வருடாவருடம் நியூசிலாந்தில் முயல்களை வேட்டையாடும் " பன்னி ஈஸ்டர் " ( Bunny Easter ) எனும் திருவிழா கொண்டாடப்படும். இந்த வருடம் நடந்த பன்னி ஈஸ்டரின் போது, பலரும் காவல்துறைக்கு போன் செய்து, முயல்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர். இளைய தலைமுறையினர் மத்தியில் மிருகங்களுக்கான மதிப்பு பெருமளவு இருப்பதை நியூசிலாந்து காவல்துறை உணர்ந்தது. சரி அவர்களுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு தான் எலியட்டை கான்ஸ்டபிளாக பணியமர்த்தினர். 

மக்களுடன் நட்பாகப் பழகும் காவல்துறை - கான்ஸ்டபிள் பன்றிக்குட்டி

அளவான வேகத்தில் வண்டிகளை ஓட்ட வேண்டும் என்பதில் தொடங்கி, குழந்தைகள் பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும், திருட்டிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி, திருடுவது எத்தனைப் பெரிய பாவச் செயல் என்பதில் தொடங்கி, சக நண்பனைப் போல் வார இறுதிகளைக் கொண்டாடிய போட்டோக்களைப் போடுவது, அவ்வப் போது ஜாலியான ஸ்டேட்டஸ்களைத் தட்டுவது என நியூசிலாந்து மக்களின் மனங்களில் தனக்கென தனியிடத்தைப் பிடித்திருக்கிறான் எலியட். 

நியூசிலாந்து காவல்துறையில் பன்றிக்குட்டி - எலியட்

எலியட்டை போலீஸ் கான்ஸ்டபிள் ஆக்கியதிலிருந்து உண்மையிலேயே வேகமாக வண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது. எலியட் சொல்வதற்கு இளைஞர்கள் மதிப்பளிக்கிறார்கள் என்கிறார்கள், நியூசிலாந்து காவல்துறையினர். அதுமட்டுமில்லாமல், தாங்கள் விளையாடும் ரக்பி மேட்ச்சுகளின் வெற்றிகளைப் பகிர்ந்துக் கொள்வது, தங்கள் மோப்ப நாய்களின் சாகசங்களைப் பகிர்ந்துக் கொள்வது, சில கலக்கலான மீம்களைப் பகிர்வது, சமயங்களில் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளைப் பகிர்வது என பொது மக்களோடு இணக்கமாகவும், நட்பாகவும் இருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நியூசிலாந்து காவல்துறையினர். மக்களும் காவல்துறையினர் உண்மையிலேயே தங்களின் நண்பனாகப் பார்க்கிறார்கள். 

நியூசிலாந்து காவல்துறையில் பன்றிக்குட்டி - எலியட்

அப்படியே, உங்கள் வீட்டருகிலிருக்கும் போலீசைப் பாருங்கள். அசிங்கமான கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டு, ஏமாந்தவர்களிடம் சில நூறுகளை வாங்கி  மடித்து வைத்துக் கொண்டு, கட்டற்ற டிராபிக் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியே செல்போனில் பேசிக் கொண்டு என கிட்டவே நெருங்க முடியாத அளவிற்கு பயமுறுத்திக் கொண்டு நிற்பார்கள். அதே சமயம், அவர்கள் நிற்கும் கூண்டிலோ, அவர்களின் வாகனத்திலோ நிச்சயம் இது எழுதப்பட்டிருக்கும்...

"காவல்துறை உங்கள் நண்பன்" 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்