வெளியிடப்பட்ட நேரம்: 00:59 (05/05/2017)

கடைசி தொடர்பு:09:29 (05/05/2017)

ஏர்டெல் நிறுவனத்துடன் கைகோத்த ஃபேஸ்புக்!

உலகில் இணைய வசதி இல்லாத இடங்களில், இணைய வசதிகளை ஏற்படுத்த ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இதற்காக, எக்ஸ்பிரஸ் வைஃபை என்ற  பிரத்யேகத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்திவருகிறது, ஃபேஸ்புக். 2015-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் இந்தியா உள்ளிட்ட ஐந்து  நாடுகளில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஏற்கெனவே, இதற்காக ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத் மற்றும் மேகாலயா மாநிலங்களில் சுமார் 700 வைஃபை ஸ்பாட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, ஏர்டெல் நிறுவனத்துடன் ஃபேஸ்புக் கைகோர்த்துள்ளது. 

 

Airtel, Facebook

 

இதன்மூலம், பப்ளிக் வைஃபை ஹாட்ஸ்பாட்களை ஏற்படுத்தி, கிராமப்புறப் பகுதிகளில் இணைய வசதியை ஏற்படுத்தித் தர திட்டமிடுகிறது, ஃபேஸ்புக். கூகுள் நிறுவனமும் இதேபோல இந்தியாவின் முன்னணி ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவையை அளித்துவருகிறது. 

 

ஆனால், ஃபேஸ்புக்கின் எக்ஸ்பிரஸ் சேவை, கூகுளின் ரயில்நிலைய வைஃபை போல இலவச சேவை கிடையாது. வைஃபை வசதியைப் பெறுவதற்காக மக்கள் பணம் செலுத்த வேண்டும். இதற்காக, 20,000 வைஃபை ஸ்பாட்களை வரும் நாட்களில் அமைக்க இருக்கிறது ஏர்டெல் நிறுவனம். மக்களுக்கு, குறிப்பிட்ட சில இணையதளங்களை மட்டும் இலவசமாக வழங்குவதற்காக, சில மாதங்களுக்கு முன்னர் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை ஃபேஸ்புக் முன்னெடுத்தது. அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, அதில் இருந்து பின்வாங்கியது. தற்போது, இந்த எக்ஸ்பிரஸ் வைஃபை திட்டத்தில் அதிக கவனம் செலுத்திவருகிறது, ஃபேஸ்புக்.