குட் நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!

 

கடந்த இரண்டாண்டுகளாக, இந்திய தீபகற்பப் பகுதியையும் தெற்காசியப் பகுதியையும் வாட்டிவதைத்த எல் நினோ பருவநிலை முடிவடைந்துவிட்டதாக ஆஸ்திரேலிய வானிலைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய பொது இயக்குநர் கே.ஜே.ரமேஷ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்...

'இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழையை எதிர்பார்க்கலாம். இந்தியப் பருவகால மழையின்மூலம் மட்டுமே விவசாயத்துக்குத் தேவையான 70 சதவிகிதத்தைப் பெறுகிறோம். பருத்தி, சோளம், அரிசி, கரும்பு போன்றவற்றின் விளைச்சலுக்கு இந்த மழையின் தேவை மிகவும் முக்கியம். போதுமான மழையில்லாமல் இவற்றின் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வரையான எங்கள் மதிப்பீட்டின்படி, வரப்போகும் பருவத்தை 96 சதவிகிதம் கணித்துள்ளோம். நல்லதொரு பருவகாலத்துக்கான சாதகமான சூழ்நிலை உருவாகிவருகிறது என்றே சொல்லலாம்' என்று தெரிவித்துள்ளார்.

பருவத்தில் பொய்த்துப்போகும் மழை, காட்டுத்தீ, வறட்சி, திடீர் வெள்ளம் போன்றவை எல் நினோவின் செயல்பாடுகளாகச் சொல்லப்படும். அதெல்லாமே இந்தியாவில் நடந்ததாக ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும் எல்நினோவின் செயல் எனச் சொல்லும் அது, இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான மழை பொழிவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படத்  துவங்கிவிட்டதாகத் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஜூனில் தொடங்கி நான்கு மாதம் நடக்கும் 'தென்மேற்குப் பருவமழை', நன்கு பொழிவதற்கான சூழல் தற்போதே தெரிவதாகவும், அதற்கான அறிகுறிதான் தமிழகத்தில் ஆங்காங்கே பெய்துவரும் கோடைமழை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!