கதறவிட்ட அமெரிக்க ஊடகங்கள்... புலம்பித் தள்ளும் ட்ரம்ப்!

Donald trump

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஆனால், ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்க ஊடகங்களால் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஊடகங்கள் ஒரு பக்கம் வறுத்தெடுத்தது என்றால், மறுபக்கம் சொந்த நாட்டின் பெரும்பான்மையினரே 'அவர் சிறுபான்மையினருக்கு எதிராகவும் கருப்பினத்தவர்களுக்கு எதிராகவும் வெறுப்பைக் கக்குகிறார்' என்று தொடர் குற்றம் சாட்டினர்.

இந்த விமர்சனங்களுக்கு ஏற்றார் போல், ட்ரம்ப்பும் தொடர்ச்சியாக, சர்ச்சை கருத்துகளைப் பொதுத் தளத்தில் முன் மொழிந்து கொண்டிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கண்டிப்பாக அவர் தோல்வியடைவார் என்று பலரால் கூறப்பட்டது. ஆனாலும், அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கும் வகையில் தேர்தலில் வெற்றி பெற்று, அதிபராக பதவியேற்றார்.  அவர் அதிபராக பொறுப்பபேற்ற போதிலும், ஊடகங்கள் அவரை விட்டபாடில்லை. 

இந்நிலையில்தான் ட்ரம்ப் ராணுவத்தினர் முன்பு ஒரு கூட்டத்தில், 'என்னை ஊடகங்கள் எப்படி நடத்துகிறது என்று பாருங்கள். வரலாற்றில் என்னைப் போன்ற ஒரு அரசியல்வாதியும் இப்படி நடத்தப்பட்டதில்லை. நான் அதை அறுதியிட்டு கூற முடியும். இவர்கள் இப்படி நடத்தியதால்தான் நான் வெற்றி பெற்றேன். இப்படி நடத்தப்படுவதுதான் உங்களை மேலும் வலிமை மிக்கவராக மாற்றும். எப்போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது. எப்போதும் விலகிவிடக்கூடாது. எது சரியென்று படுகிறதோ அதை செய்யாமல் இருக்கக் கூடாது. எதுவும் வாழ்க்கையில் சுலபமில்லை. நீங்கள் உங்கள் போரில் சரியாக இருக்கும் பட்சத்தில்தான் அதிக எதிர்ப்பும் இருக்கும். இந்த தேசத்தின் மறக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேவை செய்வதற்காகத்தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதைத்தான் நான் செய்யப் போகிறேன்' என்று கூறியுள்ளார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!