வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (18/05/2017)

கடைசி தொடர்பு:08:13 (19/05/2017)

'குல்பூஷன் மரண தண்டனைக்குத் தடை!' - பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த சர்வதேச நீதிமன்றம்

குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார் குல்பூஷன் ஜாதவ். கைது செய்யப்பட்ட குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் கடந்த 8 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இரண்டு நாள்களுக்கு வழக்கு விசாரணை நடந்தது. இதையடுத்து, இன்று வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், 'ஜாதவுக்கு முறையான சட்ட நிபுணரின் உதவியைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் அப்படிச் செய்யவில்லை. குல்பூஷனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை போன்ற தொடர்பையும் பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவின் முறையீடு நியாயமானதுதான் என்று தெரிகிறது. எனவே, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனைக்கு, தடை விதிக்கப்படுகிறது. இந்த விஷயம் குறித்து இறுதி முடிவு எடுக்கும்வரை எந்தவித நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கக் கூடாது' என்று கூறியுள்ளது. 

இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.