இரண்டாவது ராணுவக் கப்பலை அனுப்பிய அமெரிக்கா... கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்கா - வட கொரியா இடையில் பல மாதங்களாக பனிப்போர் நிலவிவருகிறது. பிரச்னைக்குத் தீர்வு எட்டுப்பட்டுவிடும் என்று நினைக்கும்போது, இரு நாடுகளில் ஏதாவது ஒன்று தனது துடுக்கத்தனமான நடவடிக்கையின் மூலம், சுமுகப் பேச்சுவார்த்தையை சீர்குலைத்துவிடுகின்றது. இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்னை ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா, 'கொரிய தீபகற்பத்தில் அனுமதியின்றி எந்தவித அணு ஆயுத சோதனையும் வட கொரியா செய்யக் கூடாது' என்று கறாராகக் கூறிவந்தது. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் வட கொரியா, 'அமெரிக்காவின் பேச்சுக்கெல்லாம் கட்டுப்பட முடியாது. எங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் எந்தவித சோதனை வேண்டுமானாலும் நடத்துவோம்' என்று தொடர்ச்சியாக வல்லரசின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளியது. 

 

 

 

இந்நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வட கொரியா ஆயுத சோதனையின் உச்சக்கட்டமாக, தொலைதூரம் சென்று இலக்கைக் குறவைத்துத் தாக்கும் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாகச் செய்தது. இந்தச் செயலால் கொதித்தெழுந்த அமெரிக்கா, 'அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என்று கூறும்போதுதான் இப்படிப்பட்ட செயலில் வட கொரியா ஈடுபட வேண்டுமா? பேச்சுவார்த்தையை இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்று இணக்கமான சூழலை எட்டுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

தற்போது அமெரிக்கா, தனது இரண்டாவது ராணுவக் கப்பலை வட கொரியாவுக்கு அருகில் நிறுத்திவைத்துள்ளது. யு.எஸ்.எஸ் ரோனால்டு ரீகன் என்ற ராணுவக் கப்பலைத்தான் (USS Ronald Reagan aircraft carrier) கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம், சில நாள்களாக அமெரிக்கா - கொரியா இடையில் ஓய்ந்திருத்த பிரச்னை தற்போது மீண்டும் தட்டி எழுப்பப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பம் மறுபடியும் பதற்றமான சூழலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!