வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (23/05/2017)

கடைசி தொடர்பு:14:37 (23/05/2017)

சென்னை வெள்ளம் முதல் மான்செஸ்டர் குண்டுவெடிப்பு வரை... எஞ்சியது இது மட்டுமே!

பிரபல அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான அரீயனா கிராண்டே, `டேஞ்சரஸ் வுமன் ' என்ற பெயரில் உலகம் முழுக்க இசைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மான்செஸ்டர் நகரில், கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உள்ளுர் நேரப்படி நேற்றிரவு 10:30 மணியளவில் நிகழ்ச்சி நடந்த மான்செஸ்டர் அரங்கத்தில் பயங்கரச் சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்தன. தற்கொலை படைத்தாக்குதலான இதில் 22 பேர் பலியானார்கள்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம்  உள்ளது.

மான்செஸ்டர் நகரில் குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பிலிருந்து பாடகி அரீயனா கிராண்டே உயிர் தப்பிவிட்டார். 23 வயதான இவர், கடந்த 2008-ம் ஆண்டு ‘Broadway Musical 13’ மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார். தொலைக்காட்சி நடிகையும்கூட. சமூக சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். தனது வருமானத்தில் பெரும்பகுதியை, அறக்கட்டளைகளுக்கு வழங்கிவருவதோடு, பாலினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து வெளியிட்டுவருபவர்.

அரீயானாவின் இசை நிகழ்ச்சியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான பின்னணி தெரியவில்லை. மான்செஸ்டர் நகரைத் தொடர்ந்து பெல்ஜியம், போலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் அரீயனா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. தற்போது அவரது சுற்றுப்பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. 'உடைந்துபோய்விட்டேன். மனதின் ஆழத்திலிருந்து உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என் வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை' என கிராண்டே தன் ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்..

இங்கிலாந்தைப் பொறுத்தவரை மான்செஸ்டர் முக்கியமான தொழில் நகரம். சுமார் ஐந்து லட்சம் மக்கள்தொகைகொண்ட இந்த நகரம், டெக்ஸ்டைல் தொழிலுக்குப் பெயர்போனது. கடந்த, 1996-ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 203 பேர் காயமடைந்தனர்; உயிரிழப்பு ஏற்படவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த மான்செஸ்டர் அரங்கம், இங்கிலாந்திலேயே இரண்டாவது மிகப்பெரிய அரங்கம். சுமார் 21 ஆயிரம் பேர் அரங்கில் அமர்ந்து நிகழ்வுகளைக் காண முடியும். கடந்த 2005ம் ஆண்டு லண்டன் நகர சுரங்க ரயில் பாதையில் நடந்த தாக்குதலில் 52 பேர் பலியானார்கள். அதற்கு பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல் இது.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 'பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல் இது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆதரவும் ஆறுதலும்  எப்போதும் உண்டு' எனத் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு சம்பவத்தில் பலியானவர்களுக்கு மான்செஸ்டர் சிட்டி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Bomb blast in Manchester

மான்செஸ்டர் நகரைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம். குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் நகரின் முக்கிய ரயில்நிலையமான விக்டோரியா ரயில்நிலையம் உடனடியாக மூடப்பட்டது. இதனால், மக்கள் செய்வதறியாது திகைத்தனர். பலர், குழந்தைகளுடன் ஆங்காங்கே  பரிதவித்துக்கொண்டிருந்தனர். சிலர், உறவினர்களைத் தேடி ஓலமிட்டனர்.

மக்கள் துயரத்தைக் கண்ட மான்செஸ்டர் நகர டாக்ஸி டிரைவர்கள்,  மக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனடியாக இறங்கினர். ட்விட்டரில் People used #RoomForManchester என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. 'வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருப்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வரலாம் ' எனப் பலரும் ட்வீட் செய்திருந்தனர். வீடுகளுக்கு வந்தவர்களை விருந்தினர்கள்போல உணவு, உடை, படுக்க அறைகள் கொடுத்து மான்செஸ்டர் மக்கள் உதவி செய்தனர்.  

 

மான்செஸ்டர் நகர கவுன்சிலர், பேவ் கிரேக், 'மான்செஸ்டர்வாசிகள் வீடுகளைத் திறந்தேவைத்திருக்கிறார்கள். வீடுகளுக்குச் செல்ல இலவசமாக டாக்ஸிகள் இயங்குகின்றன. அன்பு தழைத்திருக்கிறது' என ட்வீட் செய்திருந்தார்.

Flood in Chennai

சென்னை பெருவெள்ளம் முதல் மான்செஸ்டர் குண்டுவெடிப்பு வரை மக்களிடம் எஞ்சி நிற்பது இந்த அன்பு ஒன்றுதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்