ஜாதவ் விவகாரம்: வியன்னா ஒப்பந்தத்தை மீறுகிறதா பாகிஸ்தான்? | Jadhav Issue and Pakistan's difference of stand in vienna agreement

வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (23/05/2017)

கடைசி தொடர்பு:20:09 (23/05/2017)

ஜாதவ் விவகாரம்: வியன்னா ஒப்பந்தத்தை மீறுகிறதா பாகிஸ்தான்?

ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி, அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவின் தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதுகுறித்து மறுவிசாரணை நடத்தக்கோரி பாகிஸ்தான் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் பாகிஸ்தானின் இந்த செயல் அமைந்துள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். என்றாலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, சர்வதேச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி, இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவரது மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய அரசு வெளியுறவுத்துறை மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. என்றாலும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்க மறுத்து விட்டது. ஜாதவ் சார்பில் வழக்கறிஞரை நியமிக்கவும் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து, ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி, இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது. ஜாதவ் மரண தண்டனை தொடர்பாக இறுதித் தீர்ப்பு வரும்வரை தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், ஜாதவ் விவகாரம் தொடர்பாக மறுவிசாரணை கோரியும் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. அப்படி, பாகிஸ்தான் மனுத்தாக்கல் செய்யும்பட்சத்தில், அதுதொடர்பாக இந்தியாவின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் முன், சர்வதேச நீதிமன்றம் தனியாக விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பாகிஸ்தானின் மனுவை விசாரிப்பதால், ஏற்கெனவே ஜாதவ் விவகாரத்தில் அளிக்கப்பட்ட தண்டனை நிறுத்தம் உள்ளிட்ட எந்தவொரு உத்தரவையும் அது பாதிக்காது என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சட்டநிபுணர்கள் கருத்து கூறுகையில், "சர்வதேச நீதிமன்ற விதி 76-ன்படி, சம்பந்தப்பட்ட மனுதாரரின் கோரிக்கையின்படி, நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த இடைக்கால உத்தரவை, இறுதித் தீர்ப்புக்கு முன் எப்போது வேண்டுமானாலும் மாற்றவோ அல்லது அதுதொடர்பாக எந்த முடிவை வேண்டுமானாலும் அறிவிக்கவோ முடியும். எனவே பாகிஸ்தான், நீதிமன்ற விதி 76-ன் படி உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தை வலியுறுத்தலாம். என்றாலும், பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் ஏற்று, அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பில்லை" என்றனர். அப்படியே நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பிக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட இருதரப்பினரின் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த விதியில் கூறப்பட்டுள்ளது.

தவிர, பாகிஸ்தான் அளிக்கும் உறுதியைப் பொறுத்து, நீதிமன்றம்தான் இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்களுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜாதவ் விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறுகையில், "ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் அளித்த உத்தரவை பாகிஸ்தான் ஏற்று செயல்படும். என்றாலும் இறுதித் தீர்ப்புக்கு முன் ஜாதவின் தண்டனை நிறைவேற்றப்படாது என்று எந்த உறுதியையும் பாகிஸ்தான் அளிக்கவில்லை. இதன்மூலம், இந்த வழக்கின் அவசரத்தன்மையை அது வெளிப்படுத்துகிறது" என்றார்.

சர்வதேச ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசின் ஒப்புதலைப் பெறாமலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையிலோ ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றுவது சாத்தியமல்ல என்பதுதான் இந்தியாவுக்கு இப்போதுள்ள ஒரே நிம்மதி. எனவே, ஜாதவின் உயிருக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்