Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலைவராகிறார் சர்ச்சை டாக்டர் டெட்ரோஸ்! எய்ட்ஸிலிருந்து மீளுமா ஆப்பிரிக்கா?

டாக்டர் டெட்ரோஸ்

நோய்களுக்குப் பெரும் தீனியாகி இறப்பவர்கள் ஆப்பிரிக்க பகுதி மக்கள். ஆப்பிரிக்காவில் சென்ற ஆண்டில் எடுக்கப்பட்ட அத்தனை கணக்கீட்டின்படியும் சராசரியாக அங்கே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சம். இதில் பெரும்பாலானவர்கள் தெற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள். இதனால், வீட்டுக்குச் சம்பாதித்துத் தரும் பிள்ளைகளை நோய்க்குப் பறிகொடுத்துவிட்டு, அவர்கள் விட்டுச்சென்ற பேரப்பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முதியவர்கள் அதிகம். அவர்களால், எந்த வகையிலும் பணம் சம்பாதிக்க இயலாது என்னும் நிலையில், ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதார அடிப்படையில் வீழ்ச்சியடைந்ததற்கான காரணமும் ஒருவகையில் எய்ட்ஸ் நோய் பாதிப்புதான். 2016ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 சதவிகிதம். 2015ஆம் வருடத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என்றாலும் சர்வதேச அளவில் இது பெரும் சறுக்கல்தான். வாழ்வாதாரப் பிரச்னை, சுகாதாரக் குறைபாடு, தனிமனித மேம்பாட்டுக் குறைபாடு எனப் பல பிரச்னைகள் இதன் பின்னணியில் உள்ளன.

இந்த நிலையில்தான், சர்வதேச நாடுகளின் உலக சுகாதார மையப் பொது இயக்குநராக எத்தியோப்பியாவைச் சேர்ந்த டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரிசஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நாடு. அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக ஏற்கெனவே பதவி வகித்தவர்தான் டாக்டர் டெட்ரோஸ். இயக்குநருக்கான போட்டியில் டெட்ரோஸுடன் பாகிஸ்தானியர் ஒருவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரும் போட்டியில் இருந்தார்கள். இத்தனைக்கும் டாக்டர் டெட்ரோஸ் போட்டியிடுவதற்கு எதிராக, அவரது நாட்டு மக்கள் சிலரே, உலக சுகாதார மையத்தின் தலைமைச் செயலகத்துக்கு எதிரில், போராட்டம் நடத்தினர். அவர் பதவியில் இருந்த சமயத்தில்தான் அங்கே காலரா அதிக எண்ணிக்கையில் பரவியதாகவும், அதை அவர் கட்டுப்படுத்தத் தவறியதால், மக்கள் அதிக எண்ணிக்கையில் இறந்தார்கள் என்றும் புகார் கூறப்பட்டது. ஆனால், அதே டாக்டர் டெட்ரோஸ் பதவிக் காலத்தில்தான் ஹெச்.ஐ.வி பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் 2.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. அவரது தலைமையிலான அணிதான், நாடு எங்கிலும் உள்ள எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார அடிப்படையிலான உதவிகளை முன்னெடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது மற்ற எந்த ஆப்பிரிக்க நாடுகளுடனும் ஒப்பிடுகையில் மிகப்பெரிய இலக்கு.

தற்போது டாக்டர் டெட்ரோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, ஒருபக்கம் அந்த நாட்டு மக்களின் புகாரால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது என்றாலும், மற்றொரு பக்கம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் பிரச்னையான ஹெச்.ஐ.வி பாதிப்புக்கும் ஆப்ரிக்க பொருளாதாரத்துக்கும் இனியாவது விடிவுகாலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் டெட்ரோஸ் போன்ற நபர்களை இந்தியாவும் எளிதில் கடந்துவிட முடியாது. பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என சுகாதாரக் குறைபாட்டால், பல காய்ச்சல்களுக்கு பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நம் நாடு.  சென்ற வருட இறுதியில்தான் நாட்டின் தலைநகரம் எதிர்பாராத அளவிலான சுகாதாரச் சீர்கேட்டையும் சந்தித்தது. இது தவிர, 2015ஆம் வருடக் கணக்கெடுப்பின்படி 1.96 லட்சம் எண்ணிக்கையிலான புது நபர்கள், ஹெச்.ஐ.வி போன்ற நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்படி கடந்த ஆண்டுகளில், பல சுகாதார பாதிப்புத் தடைகளை  இந்தியாவும் கடந்து வந்துள்ள நிலையில், நாமும்  உற்றுநோக்க வேண்டிய நபராக இருக்கிறார் டெட்ரோஸ்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement