வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (27/05/2017)

கடைசி தொடர்பு:09:36 (29/05/2017)

'பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்!' - முதல் பட்ஜெட் குறித்து ட்ரம்ப் அறிவிப்பு

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு முதல் வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் ட்ரம்ப், 'இந்த புதிய பட்ஜெட்டின் மூலம், பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்' என்று நம்பிக்கை ததும்ப தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான ஹிலரி கிளின்டனை வீழ்த்திய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், இந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றார். பதவியேற்ற பின், பல முஸ்லிம் நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்காவில் நுழையத் தடை, மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்புவது என்ற பல அதிர வைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் அவர் தலைமையிலான அரசு, முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

இதையொட்டி ட்ரம்ப், 'எனது தலைமையிலான அரசு நிர்வாகம், பொருளாதார வளர்ச்சிக்கான புதிய அஸ்திவாரத்தை போட்டு வருகிறது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதார தேக்கநிலையை இப்போது தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட் ரிவர்ஸ் செய்துவிடும். இதனால், பல லட்சம் அமெரிக்கர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் குறையாது. நீங்கள் இதுவரை பார்த்ததைவிட பொருளாதாரம் மிக வேகமாக வளரும்' என்று நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசியுள்ளார்.