சிரியாவின் ரக்கா நகரத்தைச் சூறையாடும் ராணுவ மோதல்... அதிகரிக்கும் பொதுமக்கள் இறப்பு!

கடந்த சில ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடான சிரியாவில் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ், சிரிய ராணுவம், குர்திஷ் படைகள் எனப் பல தரப்புகள், தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட ஒன்றுக்கொன்று பயங்கரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இவையல்லாமல் ஒரு புறம் அமெரிக்கா 'ஐ.எஸ் அமைப்பை வேரறுப்பதே எங்கள் கடமை' என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆயுதத் தாக்குதலில்  ஈடுபட்டுள்ளது. 

தற்போது இந்தப் படைகளின் தாக்குதலுக்குச் சின்னாபின்னமாகி இருப்பது சிரியாவின் ரக்கா நகரம். ஐ.எஸ் ஆக்கிரமிப்பில் வடக்கு சிரிய பகுதியின் தலைமை இடமாக இருக்கும் இந்த நகரத்தைக் கைப்பற்ற அமெரிக்க தலைமையிலான ராணுவப் படை கடந்த பல மாதங்களாக போராடி வருகின்றது. இந்நிலையில், அங்கு ஐ.எஸ் அமைப்பின் கை பலவீனம் அடைந்திருப்பதால் கடந்த வாரம் முதல் தாக்குதலின் வீச்சை அதிகரித்துள்ளது அமெரிக்க தலைமையிலான படை. 

இந்தத் தாக்குதலில் ராக்கெட் குண்டுகள் போன்ற பல சக்தி வாய்ந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலினால் கிட்டத்தட்ட 13 பேர் இறந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அங்கிருக்கும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் அடங்குவர் என்பதுதான் துயரச் செய்தியாக உள்ளது. 

அமெரிக்கத் தரப்பில் தொடுக்கப்பட்ட தாக்குதலில், ரக்கா நகரத்திலுள்ள ஒரு பள்ளியும் தகர்க்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி செய்தி வந்துள்ளது இன்னும் துயரத்தை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!