'அணு ஆயுதம் என்பது வெற்று மிரட்டலா...?' - எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வட கொரியா

அமெரிக்கா, வட கொரியா பரிசோதனை செய்யும் ஏவுகணைகளை வழி மறித்து அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையைச் சில நாள்களுக்கு முன்னர் வெற்றிகரமாக நிகழ்த்தியது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை சோதனையை வட கொரியா மீண்டும் நிகழ்த்தவுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

கடந்த ஓராண்டில் மட்டும் வட கொரியா தொடர்ச்சியாக ஒன்பது ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பது தென்கொரியா, ஜப்பான் போன்ற அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இப்படி வட கொரியா நிகழ்த்தும் ஏவுகணைச் சோதனைக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில்தான், அமெரிக்கா புதிய ஏவுகணைச் சோதனை ஒன்றை நிகழ்த்தியது. அதன்படி, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கக்கூடிய, புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் இந்த செயல் வட கொரியாவை எரிச்சலடையச்செய்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகை கனன்று கொண்டிருக்கும் இந்த வேலையில்தான், வட கொரிய பத்திரிகையான 'தி ரோடாங் சின்மன்' (The Rodong Sinmun), 'வட கொரியாவின் அதிபர் கண் அசைத்தால், எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஏவுகணைச் சோதனையை நடத்தத் தயாராகவுள்ளோம். அமெரிக்காவுக்கு நாங்கள் ஒன்றை மட்டும்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். அணு ஆயுதம் என்பது வெற்று மிரட்டல் கிடையாது' என்று எச்சரிக்கும் தொனியில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியால் அணு ஆயுதப் போர் அச்சம் மீண்டும் உலக நாடுகள் பலவற்றை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!