வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (01/06/2017)

கடைசி தொடர்பு:12:09 (01/06/2017)

ரஷ்யாவில் மோடி! கூடங்குளம் அணுமின் நிலையம் ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?

அரசுமுறை சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினுடன் இணைந்து இருநாட்டு நல்லுறவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையம்  உள்பட பன்னிரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி- புதின்


பிரதமர் மோடி ஆறுநாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகியுள்ளார். நேற்று ரஷ்ய நாட்டுக்குச் சென்ற மோடி, தற்போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இன்று இரு நாடுகளுக்கும் இடையே பன்னிரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என இந்திய அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இன்றைய மோடி- புதின் சந்திப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தின் கடைசி இரண்டு அலகுகள் இதுவரை செயல்படாமலே உள்ளது. இதுகுறித்து மோடி, புதினுடன் ஆலோசிக்க உள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரப் பரிமாற்றங்கள், ரயில்வே உள்ளிட்ட பன்னிரண்டு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.