வெளியிடப்பட்ட நேரம்: 03:14 (02/06/2017)

கடைசி தொடர்பு:09:28 (02/06/2017)

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்... அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தைவிட்டு அமெரிக்கா வெளியேறுவதாக, அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

ட்ரம்ப்

2015 ஆம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்ற அளவு குறைப்பது. அதாவது, வளர்ச்சியின் பெயரால், பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால், சூழலியலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை நெறிமுறைப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றார்ப்போல தேசங்கள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். சீனாவும் அமெரிக்காவும்தான் உலகத்திலேயே அதிக அளவு கரியமில வாயுவை உமிழும் தேசங்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொண்டது.  

 கடந்த சில தினங்களாக, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறப் போவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன. இந்நிலையில், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். "இந்த ஒப்பந்தம், அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், "அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.