வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (03/06/2017)

கடைசி தொடர்பு:19:21 (03/06/2017)

காபூல் நகரில் தொடர் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

காபூல் நகரில் அரசியல் தலைவர் ஒருவர் மகனின் இறுதிச்சடங்கின்போது கல்லறை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 18 பேர் வரை பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காபூல் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காயர் கானா கல்லறை அருகே தொடர்ச்சியாக மூன்று குண்டுகள் வெடித்ததில்18 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று காபூலின் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவரது மகன், போராட்டத்தின்போது கொல்லப்பட்டார். இதன் இறுதிச்சடங்குகள் நடைபெற்று வந்த நிலையில் தொடர் குண்டு வெடிப்பால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

காபூல் நகரில் பாதுகாப்புச் சூழல் முற்றிலும் சீர்கெட்டுள்ளது என நேற்று போராட்டம் நடந்துள்ளது. இதில் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த அரசியல் தலைவரின் மகன் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தற்போது, நகரில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு வரவேண்டாம் என்றும் காபூல் பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.