வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (05/06/2017)

கடைசி தொடர்பு:20:37 (05/06/2017)

'எங்க நாடுதான் ரொம்ப க்ளீன்!' - ட்ரம்ப் சொல்வது உண்மையா?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 'அமெரிக்காதான் உலகத்திலேயே மிகவும் சுத்தமான நாடு. ஆனால், சில ஆய்வுகள் அதற்கு முரணான தகவல்களை வெளியிடுகின்றன' என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்

அமெரிக்காதான், சீனாவுக்கு அடுத்தபடியாக கரியமில வாயுவை அதிகம் வெளியிடும் நாடாகவுள்ளது. இதனால், அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த சில ஆண்டுகளாகக் காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும், பல்வேறு காரணங்களால் அமெரிக்கா அசுத்தமான பகுதியாக மாறிக் கொண்டிருப்பதாகப் பல்வேறு அறிக்கைகள் கூறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாகத் திடுக்கிடும் முடிவை அறிவித்துள்ளார். 

2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து... இரவு பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்றளவு குறைப்பது. அதற்கு ஏற்றாற்போல, நாடுகள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். இதனிடையே, அமெரிக்க பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும் எனக் கூறி, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இது ஒரு புறம் இருக்க, ட்ரம்ப், 'அமெரிக்காதான் உலகிலேயே மிகவும் சுத்தமான நாடு. ஆனால், அதைச் சில ஆய்வுகள் ஏற்க மறுக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற படியும் உலகுக்கு உகந்த வகையிலும் மிகவும் சுத்தமான நாடாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கும்' என்று கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்தைப் பல்வேறு சூழலியல் செயற்பாட்டாளர்களால் விமர்சனம் செய்து வருகின்றனர்.