ஜான் கென்னடி ஜூனியருக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் வசிக்கவிருக்கும் முதல் சிறுவன்!

வெள்ளை மாளிகைக்கு நேற்று முதன்முறையாகக் குடியேறினார் அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப். இவருடன் இவர்களது மகன் பேர்ரன் ட்ரம்ப்பும் இனி வெள்ளை மாளிகையிலேயேதான் வசிப்பார் என்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம் ட்ரம்ப்.

ட்ரம்ப்- மெலானியா

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்று ஆறு மாத காலத்துக்குப் பின்னர் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப், மகன் பேர்ரன் ட்ரம்ப் ஆகியோர் வெள்ளை மாளிகையில் குடியேறியுள்ளனர். முன்னதாக மெலானியா வெள்ளை மாளிகையில் குடியேறாததால் பல வதந்திகள் உலக அளவில் பரவி வந்தன. தற்போது மெலானியாவின் வருகையால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் ட்ரம்ப் தம்பதியினர் நியூயார்க் நகரத்தில் வசித்து வந்தனர். அவர்களது மகன் பேர்ரன் ட்ரம்ப் பள்ளிக்கல்வி வாஷிங்டன்னுக்கு குடிபெயர்ந்ததால் தடைபடும் என இத்தனை காலம் நியூயார்க்கில் மகனுக்காக வசித்து வந்ததாகக் கூறுகிறார் மெலானியா. தற்போது ஆறு மாதங்களுக்குப் பின்னர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறியதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மெலானியா. அதில், ’புது வீட்டில் நாங்கள் சேகரிக்கவிருக்கும் நினைவுகளுக்காகக் காத்திருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை வரலாற்றிலேயே ஒரு அதிபரின் மனைவி மாளிகையில் குடியேற அதிகக் காலம் எடுத்தது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. மேலும், 1963-ல் மூன்று வயது சிறுவன் ஜான் கென்னடி ஜூனியருக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் வசிக்கவிருக்கும் முதல் சிறுவன் பேர்ரன் ட்ரம்ப் (வயது 11) தான். எதுவாயினும், மனைவியும், மகனும் வந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம் ட்ரம்ப்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!