Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவனம்... பறிபோக இருக்கும் 12 கோடி பேரின் வேலைவாய்ப்பு! - என்ன காரணம்? #NoToGMMustard

விவசாயப் பெண்கள்

விவசாயிகள் என்றாலே ஏர்கலப்பை தூக்கிச் செல்லும் ஓர் ஆணின் உருவம்தான் எல்லோருக்கும் பொதுவாக நினைவில் தோன்றும். ஆனால், உண்மையில் நிலைமை வேறு. இந்திய அளவில் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களில் 80 சதவிகிதம் பேர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தப் பெண் விவசாயிகள் தொடர்பான புள்ளிவிவர முக்கியத்துவம் எதற்கு என்று பார்ப்பதற்கு முன், மரபணு மாற்றப் பயிர்கள் குறித்த சில தெளிவுகள் தேவைப்படுகின்றன. 

விளையும் விஷம் விதையிலேயே தெரியும்

விவசாய நிலத்தில் பெண்கள்

மரபணு மாற்றப் பயிர்கள், சர்வதேச அளவில் பாரம்பர்ய விவசாயமும் விவசாயிகளும் வீழ்ச்சியடைவதற்குப் பெரும் காரணமாக இருக்கப்போவன. சாப்பிடும் உணவுக்கான உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் நிலத்தில் தெளிக்கப்படுவதுபோய், அவற்றை நேரடியாகப் பயிர்களின் மரபணுக்களில் செலுத்தப்பட்டு விளைவிப்பது என்பதுதான் இந்தப் பயிர்கள் பற்றிய ரத்தினச் சுருக்க அறிமுகம். 

மரபணுவில் கலக்கப்படும் பூச்சிக்கொல்லிகள்

மான்சாண்டோ

இவற்றைத் தயாரித்துவந்த மான்சாண்டோ என்னும் அமெரிக்க நிறுவனம், சோயா, சோளம், பருத்தி, பீட்ரூட் போன்ற பயிர்களை மரபணு மாற்றம்செய்து அமெரிக்கச் சந்தைகளுக்கு அனுப்பிவந்தது. பயிர்களின் மரபணு எப்படியெல்லாம் மாற்றப்பட்டது என்பதுதான் இதில் இருக்கும் ‘பகீர்’ கதை. பயிர்களைக் களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் சகிப்புத்தன்மை மிக்கதாக மாற்றியது. களைக்கொல்லிகள் என்பது பயிர்களைச் சுற்றிக் களைகள் வளர்ந்தால், அதை அழிக்க அவற்றின் மீது தெளிக்கப்படுவது; அது பயிரை விட்டுவிட்டுக் களைகளை மட்டும் அழிக்கும். பெரும்பாலும் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் கொண்டு இவை உருவாக்கப்படும். தற்போது மான்சாண்டோவின் அறிவாளிகள் குழாம் செய்திருப்பதெல்லாம், களைக்கொல்லி பாக்டீரியாக்களின் மரபணுக்களை எடுத்து இயற்கைப் பயிர்களின் விதைகளில் அதை மாற்றி விவசாயிகளிடம் விற்பனை செய்வதுதான். இதேபோலத்தான் பூச்சிக்கொல்லிகளும். எப்படிக் குடித்தாலும் விஷம் விஷம்தான். இந்தப் பூச்சிக்கொல்லி இருக்கும் பயிர்களைக் கடித்தால் பூச்சிகள் வயிற்றில் ஓட்டைவிழுந்து இறந்துபோகும். 

கடுகைத் துளைத்து களைக்கொல்லிகளைப் புகட்டி.. 

கனடா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் மான்சாண்டோ பயிர்களுக்கு அனுமதி அளித்த அதே நிலையில்... இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தப் பயிர்களுக்கு நிரந்தரமாகத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில்தான் மான்சாண்டோவை விலைக்கு வாங்கியுள்ள பேயர் நிறுவனம், தற்போது மரபணு மாற்றக் கடுகுகளை இந்தியாவில் நுழைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. கடுகுக்கு அடுத்து பல மரபணு மாற்ற விதைகள் இந்தியச் சந்தையில் நுழையத் தயாராக இருக்கின்றன.

ஓர் உண்மைச் சம்பவம்

மரபணு விதைகள் இந்திய மண்ணில் நுழைந்தால் என்னவாகும் என்பதற்கு ஓர் உண்மைச் சம்பவத்தை இங்கே விளக்க வேண்டியதாகிறது. கனடாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன் நிலத்தில் கனோலாப் பயிர்களை விதைத்திருந்தார். பக்கத்து நிலங்களில் இருந்தவர்கள் மான்சாண்டோ வகை கனோலாவைத் தங்களின் நிலங்களில் விதைத்திருந்தார்கள். காற்றினால் மான்சாண்டோ கனோலாக்களின் மகரந்தங்கள் முதலாமவரின் நிலத்திலிருந்த கனோலாக்களுடன் கலந்து அவரது நிலத்தில் விளைந்தவைகளும் மான்சாண்டோ பயிர்களாக மாறின. பாதிக்கப்பட்ட விவசாயி மான்சாண்டோவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டிய சூழலில் உஷாரான மான்சாண்டோ நிறுவனம், அந்த விவசாயி தங்களது பயிர்களின் மீதான காப்புரிமைகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக வழக்குத் தொடர்ந்து அவரை மில்லியன் கணக்கில் அபராதம் செலுத்தப் பணித்தது.

கனோலாவாக இருந்தாலும், கடுகாக இருந்தாலும் இதே நிலைதான். இதுவரை 100 கோடி ரூபாய் இந்த மரபணு மாற்றக் கடுகு தொடர்பான செயல்பாடுகளில் செலவிடப்பட்டுள்ளது. அதிக விளைச்சலும் இவற்றிலில்லை. மேலும், மொத்த நிலங்களையும் அழிக்கும் திறன் மான்சாண்டோ ரகப் பயிர்களுக்குண்டு. 

பெண் விவசாயிகளுக்கு எச்சரிக்கை!

கவிதா குருகந்தி

''பயிர்களைப் பாதிக்கும் என்பது ஒருபக்கம் இருக்க... மறுபக்கம் விவசாயிகளை அதுவும் குறிப்பாக பெண் விவசாயிகளை இது பாதிக்கும்'' என்கிறார் மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான செயற்பாட்டாளரும், நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் தலைவருமான கவிதா குருகந்தி. அண்மையில் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்த மரபணு மாற்றக் கடுகு தொடர்பான உணவு அரசியல் கருத்தரங்கில் பேசிய அவர், ”இந்தியாவில் மொத்தம் பன்னிரண்டு கோடி பெண்கள் விவசாய நிலங்களில் களைஎடுக்கும் தொழிலில், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்துக்காக ஈடுபடுகின்றனர். களைக்கொல்லி சகிப்புத்தன்மை உடைய மரபணு மாற்றப் பயிர்களை விளைவிக்கும்போது களை எடுப்பவர்களுக்கே அங்கே வேலை இல்லாமல் போய்விடும். இதனால் பெண் விவசாயிகளின் எண்ணிக்கை அபாயகர அளவில் குறையும்” என்று எச்சரித்தார்.

அறிவியல்கொண்டு அறம் மட்டும் வளர்ப்போமே... இப்படி நிலங்களையும் மனித வாழ்வையும் மலட்டடையச் செய்ய வேண்டாமே. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement