டி-ஷர்ட்டில் மட்டும் வாழ்பவரில்லை சே! - ஒரு ரீவைண்ட் | Che Guevara Birthday Special Article

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (14/06/2017)

கடைசி தொடர்பு:17:31 (14/06/2017)

டி-ஷர்ட்டில் மட்டும் வாழ்பவரில்லை சே! - ஒரு ரீவைண்ட்

ஊரே மெச்சும் அளவுக்கு தன் பையன் உயரப்போகிறான் என்று அப்போது தெரியாமல் லின்ச் மற்றும் சிலியா தம்பதியர் எர்னெஸ்டோ குவேரா என்ற மகனைப் பெற்றெடுத்தனர். அவர்தான் இன்று உலகமே போற்றிப் புகழும் சே குவேரா. அவரது பிறந்தநாள் இன்று... 

பிறப்பு :

குழந்தை சேகுவேரா

இவரை சே குவேரா என்றுதான் பலருக்கும் அடையாளம் தெரியும். அர்ஜென்டினாவில் ரொஸாரியோ எனும் ஊரில் பிறந்த குவேரா தன்னுடைய சிறு வயதிலேயே அரசியலின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மக்களுக்கு மட்டுமின்றி ஆஸ்துமாவுக்கும் இவரைப் பிடித்துப்போனதால் அந்த நோய் சிறு வயதிலேயே இவரை இறுகப்பற்றியது. இருப்பினும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். ரக்பி, தன் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட சதுரங்க ஆட்டம், நீச்சல் போன்ற பல விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். இவர் கற்றுக்கொண்ட சதுரங்க ஆட்டம் பிற்காலத்தில் மக்களுக்காகப் போராடும்போது பயன்படும் என்று அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் கவிதை மீது ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் வீட்டில் 3000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தனவாம். 

படிப்பு மற்றும் பயணம் :

1948-ல் தன்னுடைய மருத்துவப் படிப்பை ப்யுனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து மருத்துவப் படிப்புக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு தனது நண்பரான ஆல்பெர்டோ க்ராண்டோவுடன் தென் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். அங்குள்ள மக்கள் தொழுநோயால் அவதிபட்டுக்கொண்டிருந்தார்கள். அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்பதற்காகத்தான் அந்தப் பயணம். பெரு என்னும் ஊருக்கு அருகில் இருக்கும் அமேஸான் ஆற்றங்கறையில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொண்டு செய்வதே இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது. அந்தப் பயணமானது அவரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட ஒன்றாக அமைந்தது. போகிற இடங்கள் எங்கும் அடிமைத்தளையை உணர்ந்த சேவின் ஆழ் மனதில் பதிந்து போகும் அளவுக்கு அந்தப் பயணமானது அமைந்தது. அந்தப் பயணம் குறித்து அவரது நண்பருடன் இணைந்து 'தி மோட்டார் சைக்கிள் டைரிஸ்' எனும் தலைப்பில் புத்தகமும் எழுதி வெளியிட்டார். அதை மையமாக வைத்து 2004-ல் வெளியான திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பெற்றது. 8000 கிலோமீட்டர் பயணித்து முடித்த பின்னர் பாதியில் விட்ட தன் படிப்பை மீண்டும் தொடங்கினார். 

போராளி :

சே

அநேகப் போராளிகள் அவர்களுடைய நாட்டுக்காக மட்டுமே போராடினார்கள். ஆனால், சே குவேரா மட்டுமே 'இந்த உலகத்தில் எந்த மூலையில் அடிமைத்தனமும், அநீதியும், ஏகாதிபத்தியமும் தலைதூக்கி நிற்கிறதோ அங்கெல்லாம் வந்து அந்த நாட்டுக்காக போராடுவேன்... போராடுவது மட்டுமல்லாமல் அந்த மக்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்' என்று சொன்னார். சொன்னது போல் பொலிவியா நாட்டுக்குச் செல்லும்போது அவர்களது எதிரிகளால் கொல்லப்பட்டார் சே. அவர் சொன்ன அந்தக் காரணத்தினாலே எல்லா நாட்டு மக்களுக்கும் அவரைப் பிடித்துப்போனது. கியூபா நாட்டில் பட்டிஸ்டா என்பவரின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சே மிகப்பெரும் ரசிகன். இவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகவே, காஸ்ட்ரோவின் இறுக்கமான நட்பு சேவுக்கு கிடைத்தது. இருவரும் இணைந்து, வெறும் ஆயிரத்துக்கும் குறைவான கொரில்லா வீரர்களை வைத்து லட்சம் பேருக்கு மேல் வலிமைவாய்ந்த பட்டிஸ்டாவின் சர்வாதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக வென்று, இறுதியில் விடுதலையையும் பெற்றுத்தந்தார்கள். அதே மண்ணுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ அதிபரானார். இது சே குவேராவுக்கு முதல் வெற்றி.

அடங்கா வெறி :

அந்த ஒரு நாட்டுக்கு மட்டும் வெற்றி பெற்றுத் தந்ததில் சேவுக்கு மனநிறைவு ஏற்படவில்லை. கியூபாவில் கிடைத்த அமைச்சர் பதிவியினாலும், பொறுப்புகளாலும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. தனக்குள் இருந்த போராட்ட உணர்வு மேலும் அனல்பறக்க எரியத் தொடங்கியது. மீண்டும் ஏதாவது ஒரு நாட்டை நோக்கிப் பயணித்து விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் இவருக்குள் வர, காங்கோ மண்ணை நோக்கி இவரின் கால்கள் பயணிக்கத் தொடங்கின. ஆனால் இந்த முடிவானது அந்த ஊரில் இருக்கும் மக்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. காஸ்ட்ரோவுக்கும் இவரது முடிவு குறித்து தயக்கம் ஏற்பட, அவரைத் தன்னால் முடிந்தவரை தடுத்துப் பார்த்தார். பயன் ஏதுமின்றி அந்நாட்டைச் சென்றைடைந்தார் சே. அங்கு சென்ற பின்தான் தெரியவந்தது அங்கு நடப்பது விடுதலைப் போராட்டம் அல்ல, சாதிச் சண்டை என்று. இருப்பினும் சே மனம் விடாமல் போராடிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் காப்பாற்ற வந்த சேவின் மீதே வெறுப்பு ஏற்பட இவரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அங்கு இருக்கும் மக்களுக்கு வரத் தொடங்கியது. விஷயம் தெரிந்த பின் காஸ்ட்ரோ அங்கிருந்து ஆட்களை அனுப்பி சேவை அழைத்து வரச் சொல்கிறார். அவர்களிடம் குவேரா, 'இந்நாட்டு மக்களைப் பார், தன்னைக் காப்பாற்ற வந்தது கூடத் தெரியாமல் இருக்கும் இந்த அறியா மக்களை விட்டு நான் எப்படி வருவேன்' என்று சொன்னார். பின் போராடியும் எந்த பயனும் கிடைக்காத குவேரா மறுபடியும் கியூபாவுக்கே திரும்பினார்.

இறுதி மூச்சு :

சேகுவேரா, ஃபிடல் கேஸ்ட்ரோ

கியூபாவில் மறுபடியும் கடத்திய நாட்களை வெறுத்தவர், பொலிவியாவின் விடுதலைக்காகப் பயணிக்கத் தொடங்கினார். தடுத்தாலும் பயனில்லை என்று தெரிந்த மக்கள் இவரின் பயணத்துக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. 100 கொரில்லா வீரர்களுடன் பொலிவியாவின் எல்லையை நோக்கிப் பயணித்தார். அங்கு அமைத்த முகாமில் மூன்று பிரிவுகளாகச் சென்று போராடலாம் என்ற எண்ணம் சேவுக்குத் தோன்ற, மூன்று பிரிவுகளாகச் செல்கிறார்கள். சேவின் தலைமை ஏற்ற அணி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற மற்ற இரண்டு அணிகளில் இருக்கும் ஆட்களும் அங்கு இருக்கும் இராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். ஆட்களை இழந்த சே மறுபடியும் முகாமுக்கே சென்றுவிடலாம் என்ற முடிவெடுத்தார். ஆனால் போகும் வழியில் எதிரி நாட்டு இராணுவ வீரர்கள் சேவை நெருங்க மீண்டும் யுத்தம் தொடங்கியது. கடைசியில் மிஞ்சியிருந்தவர்கள் சேவும், ஐந்து கொரில்லா வீரர்களும்தான். அந்த ஐந்து வீரர்களைக் காப்பாற்ற 1000 இராணுவ வீரர்களை எதிர்கொள்கிறார் சே. கடைசியில் ஒரே ஒரு வீரனும் காலில் குண்டு பாய்ந்த நிலையில் சேவும் யுத்த களத்தில் மிஞ்சியிருக்கிறார்கள். கூடவே இருக்கும் வில்லி சேவைத் தன் தோளில் போட்டுக்கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகிறார். பயனின்றிச் சுற்றி வளைத்துப் பிடித்துவிட்டு அங்கு இருக்கும் பள்ளிக்கூட அறையில் அடைத்து வைக்கிறார்கள். சுட்டுக்கொல்ல அந்நாட்டுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்க, அந்தப் படையின் தளபதி ஒரு ஆளை அறைக்கு உள்ளே அனுப்பி சுட்டுத்தள்ள உத்தரவிடுகிறார். சேவை நோக்கி துப்பாக்கியை நீட்டிய வீரனின் கைகள் நடுங்குகின்றன. சுடும்போது குறி தவறி அருகில் இருக்கும் சுவற்றில் குண்டு தெறிக்கிறது. அப்பொழுது சே அந்த வீரனிடம் சொல்கிறார், 'நீ ஒரு இராணுவ வீரன், உன் எதிரிகளை நீ தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், வீரத்தோடு உன் எதிரிரை வீழ்த்த வேண்டும், எங்கே என்னை சுடு பார்க்கலாம்'. இவைதான் சேவின் இறுதி வார்த்தைகள். 

இளைஞர்களின் எழுச்சி நாயகன் :

சேகுவேரா

இவரைப் பற்றித் தெரிந்தோ தெரியாமலோ உடுத்தும் டி-சர்ட்டில் ஆரம்பித்து கழுத்தில் அணியும் செயின் வரைக்கும் இவரின் உருவம் எட்டுதிக்கும் பரவியது.  திடீரென இவரைக் கொண்டாடுவதற்கான காரணம் என்ன என்று இளைஞர்களின் மத்தியில் கேள்வி எழும்ப, இவரைப் பற்றிய தேடல் அதிகமானது. டி-சர்ட், செயின், கையில் அணியும் பேண்ட் என இவரது படம் பொறித்த எல்லாவற்றையும் வாங்கிய இளைஞர்கள் இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள இவரின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிப் படித்தார்கள். சே சொல்லிக்கொடுக்கும் பள்ளியின் எல்லாப் பலகைகளிலும் 'தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள், தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற இந்த வாக்கியம் இருக்குமாம். அதையே நாமும் பின்பற்றலாம். இவரைப் பற்றித் தெரியாமல் இவரைப் பயன்படுத்துபவர்களுக்கு இவரின் புகழைச் சொல்லித் தெரியப்படுத்தலாம். 


டிரெண்டிங் @ விகடன்