வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (17/06/2017)

கடைசி தொடர்பு:14:11 (17/06/2017)

குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் குளறுபடிகளை மறுக்கும் இந்தியா!

சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ஏற்படுத்திய குழப்பங்களை முற்றிலும் மறுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்தியா.

குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலூசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி,  மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் குல்பூஷன் ஜாதவ் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து அவர், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் இந்தியா மேல்முறையீடு செய்ய ஆறு மாத காலம் அவகாசம் கேட்டதாகவும், இதை மறுத்த சர்வதேச நீதிமன்றம் வருகிற செப்டம்பர் மாதம் மனு சமர்ப்பிக்க வேண்டும் என இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்ததாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. மேலும், பாகிஸ்தான் பதில் மனுத் தாக்கல் செய்ய டிசம்பர் வரை சர்வதேச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானின் அறிவிப்பை முற்றிலுமாக மறுத்துள்ளது இந்தியா. இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்தியா தரப்பு வாதங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக இஸ்லாமாபாத் தனது தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக சமர்பித்த பின்னர் இந்தியாவின் முறை வரும், அதற்கு பின்னர் இந்தியாவின் மனுவுக்கு பாகிஸ்தான் பதில் மனு அளிக்க மூன்று மாத காலம் அவகாசம் அளிக்கப்படும் என சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.